ஆகா‌‌ஷ் ஏவுகணை ஏற்றுமதிக்கு ஒப்புதல் ; மத்திய மந்திரிசபை முடிவு

ஆகா‌‌ஷ் ஏவுகணை ஏற்றுமதிக்கு ஒப்புதல் அளிப்பது என்று மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
ஆகா‌‌ஷ் ஏவுகணை ஏற்றுமதிக்கு ஒப்புதல் ; மத்திய மந்திரிசபை முடிவு
Published on

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்படுகிற ஆகாஷ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கு ஒப்புதல் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.37 ஆயிரத்து 500 கோடி) ராணுவ தளவாட ஏற்றுமதி என்ற இலக்கினை அடைவதற்காகவும், நட்பு நாடுகளுடன் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டார். அவற்றில் ஒன்றில், தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், இந்தியா ராணுவ தளவாடங்கள் மற்றும் ஏவுகணைகள் உற்பத்தி செய்யும் திறன்களில் வளர்ந்து வருகிறது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

விண்வெளியை அமைதிக்காக பயன்படுத்துவதில் ஒத்துழைப்பது என்று இந்தியாவும், பூடானும் கடந்த மாதம் 19-ந்தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தத்துக்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது. இதை நிருபர்களிடம் பேசும்போது மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

இதன்மூலம் இந்தியாவும், பூடானும் பூமியின் தொலைநிலை உணர்தல், செயற்கைக்கோள் தகவல் பரிமாற்றம், செயற்கைக்கோள் அடிப்படையில் கப்பலை செலுத்துதல், விண்வெளி அறிவியல், கிரக ஆய்வு, விண்கலம் மற்றும் விண்வெளி அமைப்புகள் மற்றும் தரை அமைப்புகள், விண்வெளி தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை தொடரும்.

எஸ்டோனியா, பராகுவே மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகளில் இந்திய தூதரகங்களை புதிதாக திறப்பதற்கும் மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது. இதன்மூலம் இந்த நாடுகளுடன் இந்தியா வர்த்தக, கலாசார உறவுகளை மேம்படுத்த முடியும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகத்தில் ரூ.3,004.63 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com