தமிழகத்தில் பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழி சாலை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கோப்புப்படம்
நேரடியாக 8.4 லட்சம் பேருக்கும், மறைமுக அடிப்படையில் 10.45 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும்.
புதுடெல்லி,
தமிழகத்தில் மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி ஆகிய போக்குவரத்துக்கான பகுதிகள் தற்போது, 2 வழி தேசிய நெடுஞ்சாலை 87 மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நம்பியே உள்ளது. எனினும், போக்குவரத்து நெரிசலான தருணங்களில், வாகனங்கள் செல்வதற்கு அதிகம் சிரமப்படுகின்றன.
இதனை எதிர்கொள்வதற்காக பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான 46.7 கி.மீ. தொலைவை 4 வழி சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக, என்.எச்.-87 தேசிய நெடுஞ்சாலைக்குட்பட்ட பிரிவில் பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழி சாலை அமைப்பதற்காகு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதுபற்றி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் விவரித்து உள்ளார். இதன்படி, ரூ.1,853 கோடி மதிப்பில் இந்த திட்டம், ஹைபிரீட் ஆனுவிட்டி மோட் எனப்படும் அரசு மற்றும் தனியார் நிதியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
இதனால், இந்த வழியில் போக்குவரத்து நெரிசல் குறையும். பாதுகாப்பு மேம்படும். பரமக்குடி, சத்திரக்குடி, அச்சுந்தன்வயல் மற்றும் ராமநாதபுரம் போன்ற விரைவாக வளர்ந்து வரும் நகரங்களுக்கான போக்குவரத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும்.
இந்த திட்டம் முழுமையாக நிறைவடைந்ததும், பொருளாதார வளர்ச்சி, பெரிய அளவிலான மத மற்றும் பொருளாதார மையங்களுக்கான இணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், வர்த்தக மற்றும் தொழில் மேம்பாட்டுக்காக புதிய அகன்ற சாலைகளை திறப்பது ஆகியவற்றிற்கு இந்த பகுதிக்கான திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.
இதனால், நேரடியாக 8.4 லட்சம் பேருக்கும், மறைமுக அடிப்படையில் 10.45 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும். அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் வளம் ஆகியவற்றிற்கான புதிய வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும்.






