கூட்டுறவு துறையின் உணவு தானிய சேமிப்பு திறனை அதிகரிக்க ரூ.1 லட்சம் கோடி - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

கூட்டுறவு துறையின் உணவு தானிய சேமிப்பு திறனை அதிகரிக்கும் வகையில் ரூ.1 லட்சம் கோடி திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் முக்கியமாக, கூட்டுறவுத்துறையின் உணவு தானிய சேமிப்பு திறனை அதிகரிக்கும் வகையில் ரூ.1 லட்சம் கோடிக்கான திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 3,100 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி நடைபெறுகிறது. ஆனால் இதில் 47 சதவீதத்தை சேமிக்கும் அளவுக்கே தற்போது வசதிகள் உள்ளன.

ரூ.1 லட்சம் கோடி திட்டம்

குறிப்பாக 1,450 லட்சம் டன் உணவு தானியங்களை சேமித்து வைப்பதற்கான வசதிகள் மட்டுமே கூட்டுறவுத்துறையில் உள்ளன. இதை அடுத்த 5 ஆண்டுகளில் 2,150 லட்சம் டன் அளவுக்கு உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக ரூ.1 லட்சம் கோடியில் திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு கூட்டுறவுத்துறை அனுப்பி உள்ளது. இந்த திட்டத்துக்கு மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது.

இதன் மூலம் மேலும் 700 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும்.

உணவு பாதுகாப்பு

இவ்வாறு அதிகமான உணவு தானியங்களை சேமிக்கும் வசதி கிடைப்பதால் உணவு தானியங்கள் சேதமடைவது தவிர்க்கப்படும். மேலும், இறக்குமதி குறைக்கப்படுவதுடன், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

இதைப்போல இந்த வசதிகள் மேம்படுவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி பொருட்களை எடுத்துச்செல்லும் செலவினம் குறைவதுடன், உணவு பாதுகாப்பும் வலுப்படுத்தப்படும்.

ஒருங்கிணைந்த நகர்ப்புற நிர்வாகம்

இதைத்தவிர ஒருங்கிணைந்த நகர்ப்புற நிர்வாகத்தை மையமாகக்கொண்டு வட்டப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கான 'புத்தாக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் நிலைத்த நகர முதலீடுகள்' (சிட்டிஸ் 2.0) திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இந்த நிதியாண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் இந்த திட்டம் பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

இந்த தகவல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com