உரத்துக்கு ரூ.51,875 கோடி மானியம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

உரத்துக்கு ரூ.51 ஆயிரத்து 875 கோடி மானியம் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி, நடப்பு 'ராபி' பருவத்தில் உரங்களுக்கு ரூ.51 ஆயிரத்து 875 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளித்தது.

சர்வதேச சந்தையில் உரம் மற்றும் இடுபொருட்கள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, அதன் சுமையை விவசாயிகளுக்கு ஏற்றாமல், அவர்களுக்கு மலிவு விலையில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசிக் உரங்கள் கிடைக்கச் செய்வதற்காக, மத்திய மந்திரிசபை இம்முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, நைட்ரஜன் உரத்துக்கு கிலோவுக்கு ரூ.98.02 மானியமாக வழங்கப்படும். பாஸ்பரஸ் உரத்துக்கு கிலோவுக்கு ரூ.66.93 மானியமாக வழங்கப்படும். பொட்டாஷ் உரத்துக்கு கிலோவுக்கு ரூ.23.65 மானியமாக வழங்கப்படும். சல்பர் உரத்துக்கு கிலோவுக்கு ரூ.6.12 மானியமாக வழங்கப்படும்.

மொத்தத்தில், அக்டோபர் 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரையிலான நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது பாதியில் ரூ.51 ஆயிரத்து 875 கோடி மானியம் வழங்க கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மானியம், உர நிறுவனங்களுக்கு வழங்கப்படும். அதன் மூலம், அவர்கள் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்களை விற்பார்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஏற்கனவே, 'காரிப்' பருவத்துக்கு உரத்துக்காக மத்திய அரசு ரூ.60 ஆயிரத்து 939 கோடி மானியம் வழங்கி உள்ளது.

கரும்புச்சாறில் இருந்து எடுக்கப்படும் எத்தனால், பெட்ரோலில் கலக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், எத்தனால் விலையை பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி உயர்த்தி உள்ளது. டிசம்பர் மாதம் தொடங்கும் வினியோக ஆண்டில், எத்தனால் விலை லிட்டருக்கு ரூ.63.45-ல் இருந்து ரூ.65.60 ஆக உயர்த்தப்படுகிறது.

அருணாசலபிரதேச தலைநகர் இடாநகரில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்துக்கு 'டோன்யி போலோ விமான நிலையம்' என்று பெயர் சூட்ட மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் ரூ.646 கோடி செலவில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இதை கட்டி உள்ளது. மாநில அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று, இந்த பெயர் சூட்டப்படுகிறது.

நீர்வள மேம்பாடு மற்றும் நிர்வாக துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக டென்மார்க்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. தற்போதைய, எதிர்கால தேவைக்கு ஏற்ப பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com