

புதுடெல்லி,
உலகின் மிகச்சிறந்த நீர்மூழ்கி போர் கப்பலான ஐ.என்.எஸ். காந்தேரி நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
மும்பை கடற்படை தளத்தில் நடந்த இந்த விழாவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு, ஐ.என்.எஸ். காந்தேரி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதேபோல ஐ.என்.எஸ். நீல்கிரி என்ற போர்க்கப்பலை சோதனை ஓட்டத்துக்காக ராஜ்நாத் சிங்கின் மனைவி சாவித்திரி சிங் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் கடற்படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்பின் பேசிய சிங், நமது பக்கத்து பகை நாடு, இந்தியாவை சீர்குலைக்க முயற்சிக்கிறது. பயங்கரவாதத்தை ஊடுருவ செய்வது நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதை முறியடிக்கும் வகையில் கடினமான முடிவுகளை எடுக்க நாம் ஒருபோதும் தயங்க மாட்டோம் என்று கூறினார்.
இதனிடையே, இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து இன்று சிறிது நேரம் யோகா பயிற்சி மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசும்பொழுது, இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்க பயங்கரவாதத்தினை ஆயுதம் ஆக பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி கடல் எல்லை வழியே ஊடுருவி மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை நாம் மறக்க முடியாது. அவை மீண்டும் நடைபெறாத வகையில் நம்முடைய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் உள்ளனர் என்று கூறியுள்ளார்.