இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா ரூ.183 கோடி அளிக்கவில்லை - மத்திய மந்திரி தகவல்

யு.எஸ்.எய்டு பணிகள் அனைத்தையும் ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் முடித்துக் கொள்ளப்போவதாக கடந்த மாதம் 29-ந்தேதி தெரிவித்தது.
புதுடெல்லி,
உலக நாடுகளில் பல்வேறு நல்ல காரியங்களுக்காக அமெரிக்க சர்வதேச மேம்பாட்டுக்கான அமைப்பு (யு.எஸ்.எய்டு) நிதியுதவி அளித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டுவரை இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அந்த அமைப்பு 2 கோடியே 10 லட்சம் டாலர் (ரூ.183 கோடி) ஒதுக்கீடு செய்ததாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இந்த தகவல் அடிப்படையில், எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த நிதியுதவியை ரத்து செய்ததாகவும் தகவல் வெளியானது.
இதற்கிடையே, நாடாளுமன்ற மாநிலங்களவை கேள்வி நேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ், ‘‘இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்கான நிதியை பயன்படுத்தியது தொடர்பான தகவல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?’’ என்று கேட்டார்.
அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்த்தன் சிங் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் யு.எஸ்.எய்டு நிதியுதவியில் செய்யப்பட்ட திட்டங்களின் செலவினங்கள் குறித்த விவரங்களை அவசரமாக அளிக்குமாறு கடந்த பிப்ரவரி 28-ந்தேதி டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
எந்த தொண்டு நிறுவனங்கள் மூலமாக அந்த திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன என்ற பட்டியலையும் அளிக்குமாறு கேட்டுக்கொண்டது.
அதற்கு 10 ஆண்டுகளில் யு.எஸ்.எய்டு நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், அவற்றின் நோக்கங்கள், அமல்படுத்திய தொண்டு நிறுவனங்கள் ஆகிய விவரங்களை அமெரிக்க தூதரகம் கடந்த ஜூலை 2-ந்தேதி பகிர்ந்து கொண்டது.
மேற்கண்ட 10 ஆண்டுகளில் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க யு.எஸ்.எய்டு ரூ.183 கோடி அளிக்கவில்லை என்றும், வாக்கு சதவீதம் தொடர்பான எந்த செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தது.
யு.எஸ்.எய்டு பணிகள் அனைத்தையும் ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் முடித்துக் கொள்ளப்போவதாக கடந்த மாதம் 29-ந்தேதி தெரிவித்தது.
இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்கான 2 கோடியே 10 லட்சம் டாலர் உள்பட உலகம் முழுவதும் ஒதுக்கப்பட்ட ரூ.48 கோடியே 60 லட்சம் டாலர் ரத்துசெய்யப்படுவதாக அமெரிக்க அரசின் செயல்திறன் துறை கடந்த பிப்ரவரி 16-ந்தேதி அறிவித்தது.
கடந்த ஜூலை 1-ந்தேதியில் இருந்து யு.எஸ்.எய்டின் செயல்பாடுகள் முடித்துக் கொள்ளப்பட்டன. அதன் 83 சதவீத திட்டங்கள் முடிவுக்கு வந்தன. 94 சதவீத ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். மீதி 17 சதவீத திட்டங்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை பொறுப்பேற்றுக் கொண்டது. யு.எஸ்.எய்டை முழுமையாக மூடும் பணி செப்டம்பர் 2-ந்தேதியுடன் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.






