

புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்த விவசாயிகள், 'டெல்லி சலோ' போராட்டத்தை 4 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
டெல்லியை நோக்கி படையெடுத்த விவசாயிகள் அரியானா எல்லையில் தடுத்த நிறுத்தப்பட்டு அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் தடுக்க போலீசார் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியின் புராரி மைதானத்தில் போராட்டம் நடத்த அமித்ஷா விடுத்த கோரிக்கையை விவசாயிகள் நிராகரித்து விட்டனர். தொடர்ந்து சிங்கு மற்றும் டிக்ரி பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்ட இடத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை, அவரது வீட்டிற்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். விவசாயிகள் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகள் புராரி மைதானத்திற்கு வந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினால், டிசம்பர் 3ஆம் தேதி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமித்ஷா ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதற்கு விவசாயிகள் மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.