

ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து காணப்பட்டது. இந்த மாத முதல் வாரத்தில் 7 பேர் வரை கொல்லப்பட்டனர். அவர்களில் பள்ளி பெண் முதல்வர் மற்றும் ஆசிரியரும் அடங்குவர். இதன்பின்னர் கடந்த சில நாட்களில் பீகாரை சேர்ந்த 3 பேர் மற்றும் உ.பி.யை சேர்ந்த ஒருவர் என 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதனால் பதற்றத்துடன் காணப்படும் காஷ்மீரில் ஏராளமான போலீசாரும், ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கடந்த 19 ஆம் தேதி காலை பிரதமர் மோடியுடன் எல்லை பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் 23-ந்தேதி(நாளை) அமித்ஷா 3 நாள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் செல்ல உள்ளார். அங்கு பா.ஜ.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகார அரசியலமைப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக அமித்ஷா காஷ்மீர் செல்கிறார். இதையடுத்து ஸ்ரீநகரில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.