கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்க மத்திய மந்திரி அமித்ஷா போபால் வருகை

மத்திய பிரதேச மாநிலம் பால் உற்பத்தியில் 3-வது இடத்தில் உள்ளது.
போபால்,
மத்திய பிரதேசத்தில் மாநில அளவிலான கூட்டுறவு மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா போபால் நகருக்கு இன்று வந்தடைந்து உள்ளார். அவரை முதல்-மந்திரி மோகன் யாதவ் சால்வை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
கூட்டுறவு துறை மந்திரியாகவும் உள்ள அமித்ஷா, மாநில அளவிலான கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதனை தொடர்ந்து, மாநில பால்பண்ணை அமைப்புகளுக்கும் மற்றும் தேசிய பால்பண்ணை வளர்ச்சி வாரியத்திற்கும் இடையே நடைபெறும் ஒப்பந்தம் ஒன்றில் கையெத்திடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி முதல்-மந்திரி மோகன் யாதவ் குறிப்பிடும்போது, அமித்ஷாவின் வருகையானது, அனைத்து பால் உற்பத்தி பிரிவினருக்கும் வரம் போன்று அமையும் என்றார்.
நம்முடைய மாநிலம் பால் உற்பத்தியில் 3-வது இடத்தில் உள்ளது. நாம் முதல் இடத்திற்கு வர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதேபோன்று அரசின் மற்ற திட்டங்களை பற்றியும் அவர் பேசினார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, கோசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, இந்த ஆண்டில், ரூ.2 ஆயிரத்து 500 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது. இதற்காக டாக்டர் அம்பேத்கர் பெயரில் காமதேனு என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
விவசாயம் மற்றும் பால் பண்ணைகளின் பிரிவில் வளர்ச்சியை காண்கிறோம் என கூறிய அவர், மாநிலத்தின் நீர் நிலைகளை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஜல் கங்கா பாதுகாப்பு திட்டம் பற்றியும் சுட்டிக்காட்டி பேசினார்.






