தலையை துண்டித்து கொலை செய்து விடுவேன் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவுக்கு மிரட்டல்

மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். #AnantKumarHegde
தலையை துண்டித்து கொலை செய்து விடுவேன் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவுக்கு மிரட்டல்
Published on

மங்களூரு,

மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை மந்திரியாக இருப்பவர் அனந்தகுமார் ஹெக்டே. இவருடைய வீடு கார்வார் மாவட்டம் சிர்சியில் அமைந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலை அனந்தகுமார் ஹெக்டேவின் வீட்டு லேன்லைன் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அவருடைய மனைவி போனை எடுத்து பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் ஒரு நபர் இந்தியில் பேசினார். இந்தியில் பேசிய நபர், அனந்தகுமார் ஹெக்டேவை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், போன் இணைப்பை துண்டித்து விட்டு இதுகுறித்து அனந்தகுமார் ஹெக்டேவிடம் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து ஒரு வெளிநாட்டு எண்ணில் இருந்து மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் பேசிய அதே மர்மநபர், நீ(அனந்தகுமார் ஹெக்டே) எல்லாம் பெரிய தலைவரா?. விரைவில் உன் தலையை துண்டித்து கொலை செய்து விடுவேன் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவின் உதவியாளர் சுரேஷ் ஷெட்டி சிர்சி மார்க்கெட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். ஏற்கனவே மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவின் பாதுகாப்பு வாகனம் மீது லாரி மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் தன்னை கொல்ல முயற்சி நடக்கிறது என்று குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில், அவரது செல்போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com