மிகப்பெரிய வர்த்தகக் குழுவுடன் மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று ஜப்பான் பயணம்

நிதி சேவைகள், சுகாதாரம் மற்றும் புத்தாக்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் இடம் பெற்றுள்ளனர்.
மிகப்பெரிய வர்த்தகக் குழுவுடன் மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று ஜப்பான் பயணம்
Published on

புதுடெல்லி,

மிகப்பெரிய வர்த்தக குழுவுடன் மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று (திங்கட் கிழமை) ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 4 நாட்கள் தங்கியிருந்து முதலீடுகளை ஈர்க்க உள்ளார்.

4 நாட்கள் பயணம்

முதலீடுகளை ஈர்ப்பதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடன் 200 பேர் கொண்ட வர்த்தக குழுவும் செல்கிறது. இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய மந்திரி பியூஸ் கோயல் தலைமையிலான குழுவினர் இன்று (திங்கட்கிழமை) முதல் 27-ந்தேதி வரை 4 நாட்கள் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தியா சார்பில் ஜப்பானுக்கு செல்லும் மிகப்பெரிய வர்த்தக குழு இதுவாகும். இந்த பயணம் டோக்கியோ, நகோயா மற்றும் ஒசாகா ஆகிய நகரங்களை உள்ளடக்கியது. உற்பத்தி, செமிகண்டக்டர், தூய் மையான எரிசக்தி, உருக்கு, வாகன உற்பத்தி, நிதி சேவைகள், சுகாதாரம் மற்றும் புத்தாக்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

முதலீடுகளை ஈர்ப்பு

இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான சிறப்பு மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை ஆழப்படுத்தவும் இந்த பயணம் உதவும். டோக்கியோவில் ஜப்பான் வர்த்தக கூட்டமைப்பான கெய்டான்ரென் பிரதிநிதிகளுடன் பியூஸ் கோயல் ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், ஜப்பானின் பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி அகசாவாரியோசியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஜப்பானிய அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களை சந்திப்பதோடு, இந்திய வம்சாவளியினருடனும் அவர் கலந்துரையாடுகிறார்.

வளர்ந்த பாரதம்

நகோயாவில் நடைபெறும் வர்த்தக கண்காட்சியில் பங்கேற்கும் அவர், வாகன மற்றும் உருக்கு துறை முதலீட்டாளர்களை சந்திக்கிறார். ஒசாகாவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் கூட்டத்துடன் இந்த பயணம் நிறைவடைகிறது. இந்தியாவின் தற்சார்பு பாரதம் (ஆத்மநிர்பர் பாரத்) மற்றும் வளர்ந்த பாரதம் 2047 (விக்சித் பாரத் 2047) தொலைநோக்கு பார்வைக்கு இந்த பயணம் முக்கிய உத்வேகத்தை அளிக்கும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பில் ஜப்பான் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com