மணிப்பூரில் கலவரம் நீடிப்பு மத்திய மந்திரியின் வீட்டைத்தாக்கி தீயிட்டு கொளுத்த முயற்சி

மணிப்பூரில் கலவரம் நீடிக்கிறது. மத்திய மந்திரியின் வீட்டைத்தாக்கி, தீயிட்டுக்கொளுத்த முயற்சி நடந்தது.
மணிப்பூரில் கலவரம் நீடிப்பு மத்திய மந்திரியின் வீட்டைத்தாக்கி தீயிட்டு கொளுத்த முயற்சி
Published on

இம்பால், 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்கக்கோரி வருகின்றனர். அதை அங்கு பழங்குடியினராக உள்ள நாகா, குகி இனத்தினர் எதிர்க்கின்றனர். இதனால் அங்கு கடந்த மாதம் 3-ந்தேதி இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்த பாடில்லை. தொடர்ந்து தீவைப்பு மற்றும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

இந்த இனக்கலவரங்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இணையதளச்சேவை முடக்கப்பட்டுள்ளது. ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மெய்தி இன மக்கள் பெருவாரியாக வாழ்கிற காமென்லோக் கிராமத்தை 14-ந் தேதி குகி இனப்போராளிகள் சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் எதிர்தரப்பைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டது, அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதைக்கண்டித்து அங்கு நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து 2 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரக்காரர்களை விரட்டியடிக்க அதிரடிப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் இம்பால் நகரில் உள்ள மத்திய வெளியறவுத்துறை மந்திரி ஆர்.கே. ரஞ்சன் சிங்கின் வீட்டை நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி சூறையாடியது. ஒரு கட்டத்தில் அந்த வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தவும் முயற்சி நடந்தது. ஆனால் பாதுகாப்பு படையினரும், தீயணைப்பு படை வீரர்களும் அதைத் தடுத்து விட்டனர். இதனால் அவரது வீடு தீக்கிரையாகாமல் தப்பியது.

மேலும் அந்தக் கும்பல் இரவில் நகர் முழுக்க வலம் வந்து, பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

தன் வீடு மீது தாக்கப்பட்டபோது மத்திய மந்திரி ரஞ்சன் சிங், கேரள மாநிலம் கொச்சியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச்சென்றிருந்தார். தன் வீடு தாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும் அவர் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு அவசர அவசரமாக சொந்த ஊருக்கு திரும்பினார்.

இதற்கிடையே அவர் கூறியதாவது:-

மே மாதம் 3-ந் தேதியில் இருந்து நான் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியை ஏற்படுத்தவும் முயற்சித்து வருகிறேன். இந்த வன்முறை, இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட தவறான புரிதலால் வந்த வினை ஆகும். அரசு ஒரு அமைதிக்குழு ஏற்படுத்தியது. அதன்செயல்முறைகள் நடந்து வருகின்றன. சமூக அமைப்புகளின் தலைவர்கள் கூடி விவாதித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து கட்டிய வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான் ஊழல்வாதியல்ல. அனைத்து சமூகத்துடனும் அரசு பேசும். பிரச்சினைக்கு தீர்வு காணும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சூழ்நிலையில், இம்பால் கிழக்கு மாவட்டத்தில், காமென்லோக் கிராமத்தில் 14-ந் தேதி குகி இனப்போராளிகளால் 9 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ளூர்வாசிகள் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்களை விரட்டியடிக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் வெடித்தனர்.

அப்போது இரு தரப்பிலும் ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர்கள் 2 பேரும், அதிரடிப்படை வீரர் ஒருவரும் காயம் அடைந்தனர். 9 பேர் கொல்லப்பட்டதில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-மந்திரி பிரென் சிங் உறுதி அளித்துள்ளார்.

இதையொட்டி நேற்று அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், " 9 பேர் கொல்லப்பட்டதில் குற்றவாளிகளை பாதுகாப்பு படையினர் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். இத்தகைய கடுமையான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் மீண்டும் இயல்பு நிலையை மீட்டெடுப்பதில் அரசின் முயற்சிகள் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com