

அகமதாபாத்
அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்ட கிரிக்கெட் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற மெகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதறகாக புதிதாக ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது இதற்கு டொனால்ட் டிரம்ப் நகாரிக் அபிவதன் சமிதி (டொனால்ட் டிரம்பிற்கான குடிமக்கள் வாழ்த்து குழு) என பெயரிடப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த குழு குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
நேற்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது , டொனால்ட் டிரம்ப் நாகரிக் அபிவதன் சமிதி இந்த நிகழ்வின் அமைப்பாளராக உள்ளது என்று கூறினார்.
இருப்பினும், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அதை அறிவித்தபோது தான் இந்த பெயர் பகிரங்கமானது. குஜராத்தில் கூட, நமஸ்தே டிரம்ப் நிகழ்விற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பிற ஏஜென்சிகள் இதுபோல் எந்தவொரு குழுவையும் பற்றி அறிந்திருக்கவில்லை.
குழு பற்றி எங்களுக்கு தெரியாது. நாங்கள் தயாரிப்புகள் மற்றும் பொருட்கள் வழங்குவது குறித்து மட்டுமே கவலைப்படுகிறோம் என ஒரு மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதியையும் பிரதமரையும் சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கான நிகழ்வை நடத்தும் குழுவைப் பற்றிய கூடுதல் விவரங்களை வழங்க வெளியுறவு அமைச்சகம் கூட மறுத்துவிட்டது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா டுவீட் செய்துள்ளார். அதில் டொனால்ட் டிரம்ப் அபிவதன் சமிதியின் தலைவர் யார்? அமெரிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு எப்போது வழங்கப்பட்டது மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது, ஜனாதிபதி டிரம்ப் ஏன் 70 லட்சம் மக்களுடன் ஒரு பெரிய நிகழ்வுக்கு உறுதியளித்ததாக சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜனாதிபதி டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறக்க இருப்பதால் முன்னதாக, கிரிக்கெட் மைதானத்தை கட்டிய குஜராத் கிரிக்கெட் சங்கம் (ஜி.சி.ஏ) இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து வருவதாக கூறப்பட்டது.
ஆனால் மைதானத்தின் திறப்பு விழா தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது, இப்போது நமஸ்தே டிரம்ப் நிகழ்வு மட்டுமே நடத்தப்படுகிறது.
கிரிக்கெட் மைதான திறப்பு விழா ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை என்றாலும், இந்த நிகழ்வோடு மைதானத்தை திறந்து வைப்பதில் பிரதமர் அலுவலகம் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கிறது.