

பெட்ரோல் விலை உயர்வு
இந்தியாவில் கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கு ஏற்ப மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வந்தது. முன்பு இந்த விலையை மத்திய அரசு மாற்றி அமைத்து வந்தது. தற்போது பெட்ரோலிய நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகிறது.இதற்கிடையே கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 கடந்து விட்டது. தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி தி.மு.க. ஆட்சியின் முதல் பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் விலை குறைப்பு
அதன்படி தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் கர்நாடகத்திலும் பெட்ரோல்-டீசல் விலைய குறைக்க வேண்டும் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தினார். இதனால் கர்நாடகத்திலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
திட்டம் இல்லை
கர்நாடகத்தில் பெட்ரோல் விலையை குறைக்கும் திட்டம் அரசிடம் இல்லை. கர்நாடகத்தில் பணம் வாங்கி கொண்டு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கப்படுவதாக எனது கவனத்திற்கு வந்துள்ளது.அவ்வாறு நெகட்டிவ் சான்றிதழ் வழங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு போலி சான்றிதழ்கள் வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும்.
பொருளாதார நடவடிக்கைகள்
கர்நாடகத்தின் வளர்ச்சியை உறுதிபடுத்துவது தான் எனது நோக்கம். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் அது பொருளாதார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும். அத்துடன் ஏழை மக்களின் சமூக-பொருளாதார நிலையும் மேம்படும். இதை மனதில் வைத்து நான் பணிகளை தொடங்கியுள்ளேன். அரசின் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். குறுகிய காலத்தில் திட்ட பயன்கள் மக்களை சென்றடையும் வகையில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.