உன்னாவ் கற்பழிப்பு வழக்கு: பா.ஜனதா எம்.எல்.ஏ. குற்றவாளி - தண்டனை விவரம் நாளை அறிவிப்பு

உன்னாவ் இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் பா.ஜனதா எம்.எம்.ஏ. குற்றவாளி என டெல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.
உன்னாவ் கற்பழிப்பு வழக்கு: பா.ஜனதா எம்.எல்.ஏ. குற்றவாளி - தண்டனை விவரம் நாளை அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலத்தில் உன்னாவ் நகரில் 2017-ம் ஆண்டு 17 வயது சிறுமி கடத்தி செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டார். பங்கர்மா தொகுதியில் பா.ஜனதா சார்பில் 4 தடவை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்கார், தன்னை கற்பழித்ததாக அந்த சிறுமி குற்றம்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து குல்தீப் சிங் செங்காரும், அவரது கூட்டாளியான சாஸ்திரி சிங் என்பவரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். தற்போது மேஜரான பாதிக்கப்பட்ட அந்த பெண் உறவினர்களுடன் கடந்த ஜூலை மாதம் காரில் சென்ற போது லாரி மோதியது. இதில் உறவினர்கள் 2 பேர் பலியானார்கள்.

அந்த பெண்ணும், வக்கீலும் படுகாயம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணை கொல்லும் நோக்கத்தில் இந்த சம்பவம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக குல்தீப் சிங் செங்கார் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இதையடுத்து குல்தீப் சிங் செங்காரை, கட்சியில் இருந்து பா.ஜனதா நீக்கியது. அதன்பின்பு இந்த விவகாரம் விசுவரூபம் ஆனதால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த வழக்கு விசாரணை லக்னோ கோர்ட்டில் இருந்து டெல்லியில் உள்ள மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து ஆகஸ்டு 5-ந்தேதி முதல் வழக்கின் விசாரணை நாள்தோறும் நடைபெற்று வந்தது.

வழக்கின் இறுதிகட்ட விசாரணை டெல்லி மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா முன்னிலையில் 10-ந் தேதி நடைபெற்றது. அப்போது 16-ந்தேதி (நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

அதன்படி நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி தர்மேஷ் சர்மா, எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று அறிவித்தார். தீர்ப்பை கேட்டதும் கோர்ட்டில் இருந்த குல்தீப் சிங் செங்கார் கதறி அழுதார். அதே வேளையில் அவரது கூட்டாளியான சாஸ்திரி சிங் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் தண்டனை குறித்த விவரங்கள் வருகிற 18-ந்தேதி(நாளை) அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். இந்த குற்றத்திற்காக குல்தீப் சிங் செங்காருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com