உன்னாவ் கற்பழிப்பு வழக்கு: பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் - கோர்ட்டில் சி.பி.ஐ. வேண்டுகோள்

உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் சி.பி.ஐ. வக்கீல் தெரிவித்தார்.
உன்னாவ் கற்பழிப்பு வழக்கு: பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் - கோர்ட்டில் சி.பி.ஐ. வேண்டுகோள்
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் 2017-ம் ஆண்டு 17 வயது சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டார். இதுதொடர்பாக அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்த குல்தீப்சிங் செங்காரும், அவரது உதவியாளரான சஷிசிங் என்பவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் கற்பழிப்பு, போக்சோ ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே அந்த இளம்பெண் சென்ற கார் மீது லாரியை ஏற்றி கொலை செய்ய சிலர் முயற்சித்தனர். இதில் அந்த பெண்ணின் உறவினர்கள் 2 பேர் பலியானார்கள். இதனால் குல்தீப்சிங் செங்கார் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அவர் பா.ஜனதா கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த வழக்கு விசாரணை லக்னோ கோர்ட்டில் இருந்து டெல்லி மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி தர்மேஷ் சர்மா நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்பில் எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் குற்றவாளி என அறிவித்தார். தண்டனை விவரம் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட உள்ளது. அதேசமயம் அவரது உதவியாளர் சஷிசிங் விடுதலை செய்யப்பட்டார்.

டெல்லி மாவட்ட கோர்ட்டில் நேற்று சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் நீதிபதி தர்மேஷ் சர்மாவிடம், இந்த வழக்கை ஒரு அமைப்புக்கு எதிரான தனிநபரின் நீதிக்கான போராட்டமாக கருதி குற்றவாளி செங்காருக்கு அதிகபட்ச தண்டனை (ஆயுள்) வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த வழக்கில் சஷிசிங் ஏன் விடுதலை செய்யப்பட்டார். அந்த பெண் தான் எனது மகளிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி குல்தீப்சிங் செங்காரிடம் அழைத்துச் சென்றார். எனது மகளின் மாமா இன்னும் சிறையில்தான் இருக்கிறார். அவர் வெளியே வரும் வரை எனக்கு நீதி கிடைக்காது. ஊடகங்களின் உதவியுடன் நான் இந்த போராட்டத்தில் வெற்றி பெறுவேன்.

ரேபரேலி விபத்துபோல ஏற்படும் என மிரட்டல்கள் தொடர்ந்து வருவதால் நான் இன்னும் அச்சத்தில்தான் இருக்கிறேன். செங்கார் சிறையில் அடைக்கப்பட்டாலும் அங்கு இருந்தே அவரால் இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com