

இம்பால்,
மணிப்பூரில் குகி-சோ ஆயுதக் குழுக்களுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாநில அரசுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் மெய்தி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே இன மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் ஒருங்கிணைந்த மணிப்பூர் பாதுகாப்புக்கான குழு சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நாகா அமைப்புகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன
குகி ஆயுதக் குழுக்களுடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஆயுத நடவடிக்கைகள் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பாக அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்த வேண்டும், அசாம் ரைபிள்ஸ் படையினரை மோதல் பகுதிகளில் இருந்து திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.மேலும், மணிப்பூரில் 1951-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.தற்போதைய மாநில அரசு பழங்குடியின மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், அரசு பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இம்பாலில் நடைபெற்ற பேரணிக்கு ஆதரவாக நாகா மக்கள் அமைப்புகள், செனாபதி மற்றும் சண்டெல் மாவட்டங்களிலும் தனித்தனியாக பேரணிகளை நடத்தின.இந்தப் போராட்டங்களில் துணை முதல்-மந்திரி நெம்சா கிப்கென் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.