ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் இன்றும் அமளி: எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்

அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த 4-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், 7 முறை எம்.எல்.ஏ.வுமான அப்துல் ரஹீம், சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் சட்டசபை நேற்று முன்தினம் கூடிய போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் முன்தினம் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று கூடிய சட்டசபையில், என்ஜினீயர் ரஷீத்தின் சகோதர குர்ஷித் அகமது, சிறப்பு அந்தஸ்தை ஆதரித்து பதாகையை காண்பித்ததால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் கூடிய சட்டசபை கூட்டத்தில் 3வது நாளாக 370வது சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்த கோரும் தீர்மானத்துக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிடிபி எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பியதால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com