

புதுடெல்லி:
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குக்கி இன மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக மத்திய அரசு மீது மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: -குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது, முதல்-அமைச்சர் மாற்றப்பட்டது, பின்னர் பா.ஜ.க. தலைமையிலான அரசு அமைந்தது என பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தும் அங்கு நிரந்தர அமைதி ஏற்படவில்லை . வன்முறை தொடங்கிய பின்னரும் பிரதமர் மோடி நீண்ட காலமாக மணிப்பூருக்குச் செல்லவில்லை.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைத்த அமைதிக் குழுவின் தற்போதைய நிலை என்ன என்றும், மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தவும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? நிர்வாக தோல்விக்கு யார் பொறுப்பு? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும், மணிப்பூர் மக்களுக்கு நீதி, பாதுகாப்பு மற்றும் நிரந்தர அமைதி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.