பிரதமர் மோடியின் ஆணவம் குறையும் வரை... மல்லிகார்ஜுன கார்கே சாடல்

வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு அதிகம் வருவது இல்லை என்று மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.
பிரதமர் மோடியின் ஆணவம் குறையும் வரை... மல்லிகார்ஜுன கார்கே சாடல்
Published on

பெங்களூரு,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர்கள் விலை உயர்வை தொடர்ந்து விவசாயத்துக்கான உரங்களின் விலை விரைவில் உயரும். இவை அனைத்தும் மோடி ஆட்சியில் மட்டும்தான் நடக்கும். இதுகுறித்து நான் பிரதமர் மோடியிடம் நேரடியாகவே கேட்க விரும்புகிறேன். மக்கள் இதெல்லாம் நடக்கும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாரக்ள். ஒருபுறம் போர் நீடித்து வருகிறது. அது உலகப்போர் உண்டாகும் அளவுக்கு நடந்து வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது போர் தொடுத்துள்ளன. அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது. இவை அனைத்தும் நடந்து வரும் நிலையில் நமது நாடு நலமாக எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதாக பிரதமர் மோடி கூறுகிறார். உலக அளவில் டாலரின் மதிப்பு குறையவில்லை. ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிதான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் தோல்வி. அவரது 2-வது தோல்வி தொலைநோக்கு பார்வை இல்லாதது. வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு அதிகம் வருவது இல்லை. மற்ற நாடுகளுக்கும் அதிகம் செல்வதும் இல்லை. ஆனால் பிரதமர் மோடி சமீப நாட்களில் மட்டும் 5 நாட்டுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இது ஏன்?.

அதனால் வெளிநாடுகளுக்கு வெறுமனே சுற்றுலா செல்வதை விட்டுவிட்டு பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, பெட்ரோல்-டீசல் விலை உள்ளிட்ட அனைத்தையும் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும். அப்படி செய்யாமல் இருப்பது பிரதமர் மோடிக்கு அழகல்ல. பிரதமரின் ஆணவம் குறையும் வரை நாட்டில் இதே நிலை தான் நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com