

புதுடெல்லி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த மாதம் 22-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு ஒருமித்த குரல் கொடுத்தனர்.
கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரிடம் நேரில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.
அந்த கூட்டத்தில், அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள், அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு வற்புறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து மத்திய நீர்பாசன மந்திரியை சந்திக்குமாறு கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அ.தி.மு.க- திமு.க உள்ளிட்ட எம்பிக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக மக்களவையில் அதிமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதிமுக எம்.பி-க்கள் வேணுகோபால், குமார், அரி, அருண்மொழிதேவன், சத்தியபாமா உள்ளிட்டோர் நோட்டீசை அளித்துள்ளனர்.
இந்த நிலையில் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திமுக மற்றும் இந்திய கம்யூ. எம்.பி-க்கள் இணைந்து கொண்டனர்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பதாகைகளை ஏந்தி எம்.பி-க்கள் கோஷம் எழுப்பினர்.
பின்னர் அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உணர்வின் அடிப்படையில் அதிமுக, திமுக எம்பிக்கள் இணைந்து காவிரி விவகாரத்தில் போராட்டம் நடத்தின. தி.மு.க எங்களுடன் இணைந்து போராடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமுயும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியும் அமையும் வரை பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்.
அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு செயல்படுவது ஏற்புடையது அல்ல. காவிரி விவகாரம் பற்றி அதிகாரிகள் மட்டத்தில்தான் பேச அழைக்கிறார்கள்; அமைச்சர்கள் மட்டத்தில் அழைப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வானத்தில்தான் வெற்றிடமே தவிர பூமியில் இல்லை என்று ரஜினியின் பேச்சுக்கு மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை பதில் அளித்தார்.