உ.பி. மகா கும்பமேளா: 24 மணிநேர சேவை, நவீன வசதிகளுடன் பிரயாக்ராஜ் விமான நிலையம்

உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் முதல் 15 நாட்களில் மொத்தம் 15 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
உ.பி. மகா கும்பமேளா: 24 மணிநேர சேவை, நவீன வசதிகளுடன் பிரயாக்ராஜ் விமான நிலையம்
Published on

பிரயாக்ராஜ்,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும் இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கமம் பகுதியில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால், நிறைய காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். ஆளில்லா விமானங்கள் உதவியுடன் காவல் நிர்வாகம் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. நீருக்கடியிலும் ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணியை செய்து வருகிறது.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் முதல் 15 நாட்களில் இருந்து இதுவரை 15 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். கங்கை மற்றும் யமுனை ஆகிய இரு ஆறுகள் சங்கமிக்கும் புனித பகுதியில் முதல் நாளில் 1 கோடி பேர் நீராடினர். 23-ந்தேதி வரையிலான முதல் 10 நாட்களில் மொத்தம் 10 கோடி பேர் நீராடினார்கள்.

கும்பமேளாவை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் விமான நிலையம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, புதிய முனையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 24 மணிநேரமும் செயல்படும் வகையில், போக்குவரத்திற்கான விமானங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. பக்தர்களுக்கு தடையற்ற பயண அனுபவம் ஏற்படும் வகையில் வசதிகளை விமான நிலையம் உறுதி செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com