இளம்பெண் மீது ஆசிட் வீச்சு.. குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் ஆன காரணத்தால் ஆத்திரம் அடைந்து ஆசிட் வீசியிருக்கிறான்.
இளம்பெண் மீது ஆசிட் வீச்சு.. குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்
Published on

மகாராஜ்கஞ்ச்,

உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தாரௌலி கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் (வயது 23) தனது தாயாருடன் கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வரும் வழியில், மர்ம நபர்கள் அந்த பெண் மீது ஆசிட் வீசிவிட்டு வாகனத்தில் ஏறி தப்பித்து சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.

இதுபற்றி கூடுதல் எஸ்பி அதிஷ் குமார் சிங் கூறியதாவது,

பாதிக்கப்பட்ட பெண்ணும் வர்மா என்ற நபரும் கடந்த சில காலமாக ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். மேலும் மூன்று மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் ஆன காரணத்தால் அந்த பெண்ணின் மீது ஆத்திரம் அடைந்து ஆசிட் வீசியிருக்கிறான்.

அந்த பெண்ணுக்கு டிசம்பர் 11ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இதை அறிந்த வர்மா அந்த பெண் எங்கு செல்கிறார் என்பதை கவனித்து, 4-5 நாட்களுக்கு முன்பே இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு இருக்கிறான்.

தாக்குதலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டரில் ஆசிட் தடயங்கள் இருந்தன. அந்த ஸ்கூட்டரை போலீசார் கைப்பற்றினர். முக்கிய குற்றவாளியான அனில் வர்மா இருக்கும் இடம் அறிந்து போலீசார் நேற்று நள்ளிரவில் அங்கு சென்று சுற்றி வளைத்தனர். அனில் வர்மா அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அனில் வர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அவனை போலீசார் கைது செய்தனர். மற்றொரு குற்றவாளி ராம் பச்சனும் தப்பி ஓட முயன்றபோது காயமடைந்தான்.

மேலும் பெண்ணின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவருக்கு ஐந்து முதல் ஏழு சதவீதம் காயங்கள் உள்ளன. பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் இந்த சம்பவம் பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை என்றனர். ஆனால் போலீசார் குற்றவாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com