உத்தரப்பிரதேசத்தில் சோகம்... திருமண கோஷ்டியினர் சென்ற வாகனம் கவிழ்ந்து 3 பேர் பலி

ராம்பூர் பர்கோனியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் சோகம்... திருமண கோஷ்டியினர் சென்ற வாகனம் கவிழ்ந்து 3 பேர் பலி
Published on

சோன்பத்ரா,

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம், மடிஹான் பகுதியில் இருந்து சோன்பத்ரா மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உறவினர்கள் நேற்று இரவு ஒரு வாகனத்தில் புறப்பட்டனர். நேற்று நள்ளிரவில் சோன்பத்ரா மாவட்டம், ராம்பூர் பர்கோனியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதர் கிராமத்திற்கு அருகில் வந்தபோது, வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அந்த வாகனத்தில் பயணித்த 12 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்தவர்களை மீட்டு சோன்பத்ரா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் மடிஹானைச் சேர்ந்த ராஜன் கோண்ட் (20), அஜெய் கோண்ட் (18), வினோத் கோண்ட் (35), ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமானதையடுத்து, மேல்சிகிச்சைக்காக அவர்கள் வாரணாசியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த விபத்து குறித்து ராம்பூர் பர்கோனியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்திற்கு சென்ற உறவினர்கள் விபத்தில் பலியானதால் திருமணக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com