உ.பி.: காதலி வீட்டுக்கு நள்ளிரவில் சென்ற காதலர்; கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு

உத்தர பிரதேசத்தில் காதலியை காண அவருடைய வீட்டுக்கு சென்ற காதலரை அக்கம்பக்கத்தினர் பிடித்து, அடித்து, உதைத்தனர்.
உ.பி.: காதலி வீட்டுக்கு நள்ளிரவில் சென்ற காதலர்; கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு
Published on

தியோரியா,

உத்தர பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் திருமணம் முடிந்து ஓராண்டான நிலையில், ஒரு தம்பதி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். ஆனால், மனைவிக்கு வேறொரு நபருடன் உள்ள தொடர்பு பற்றி அறிந்ததும் கணவன் எடுத்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆகாஷ் ஷா என்பவர் நேற்று முன்தினம் இரவு, யாருக்கும் தெரியாமல் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். எனினும், அவரை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விவரம் அறிந்து அவரை அடித்து, உதைத்துள்ளனர்.

அந்த நபர் பீகாரின் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. 2 ஆண்டுகளாக அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், வேறொரு நபருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது.

எனினும், அவரை ஆகாஷ் ஷாவால் மறக்க முடியவில்லை. இதனால், காதலியை சந்திக்க முடிவு செய்து, வீட்டுக்கே சென்று விட்டார். இந்த விவரம் பற்றி அறிந்த கணவர் வந்ததும், அனைவரும் என்ன நடக்க போகிறது என பொறுமையாக காத்திருந்தனர்.

ஆனால், நடந்த விசயமோ வேறாக இருந்தது. கணவரிடம் அந்த பெண், தன்னுடைய காதலருடன் போக சம்மதிக்க வேண்டும் என வேண்டுகோளாக கேட்டுள்ளார்.

அதனை கேட்ட அந்த கணவர், இதற்கு ஒப்புதல் அளித்து விட்டு அவர்களை ஒன்று சேர்த்து வைத்துள்ளார். இரு குடும்பத்தினரின் ஒப்புதலை பெற்று விட்டு, தன்னுடைய மனைவி மற்றும் மனைவியின் காதலரை அழைத்து கொண்டு கோவில் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

இதன்பின்னர் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. காதலர் வந்த பைக்கிலேயே அவர்கள் இருவரையும் அந்த கணவர் அனுப்பி வைத்துள்ளார். ஓராண்டாக ஒன்றாக வசித்து விட்டு, காதலருடன் மனைவி போவதற்கு கணவர் சம்மதித்த இந்த விசயம், அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com