உத்தரபிரதேசத்தில் போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக தங்கி இருந்த ரோஹிங்கியா அகதிகள் கைது

உத்தரபிரதேச மாநிலத்தில் போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக தங்கி இருந்து ரோஹிங்கியா அகதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரபிரதேசத்தில் போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக தங்கி இருந்த ரோஹிங்கியா அகதிகள் கைது
Published on

லக்னோ,

மியான்மர் நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.

வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து வரும் ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இந்தியாவின் பல மாநிலங்களில் வாழ்ந்துவரும் ரோஹிங்கியா அகதிகளை கண்டுபிடிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வ்ருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட் பகுதியில் போலி ஆவணங்கள் மூலம் ரோகிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக அம்மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலை தொடர்ந்து மீரட் பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக தங்கி இருந்த ரோகிங்கியா அகதிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரோகிங்கியா அகதிகள் அனைவரும் குற்றவியல் மற்றும் தேச விரோத செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், கைது செய்யப்பட்ட ரோகிங்கியா அகதிகளிடம் இருந்து போலியாக தயாரிக்கப்பட்ட ஐ.நா.வால் வழங்கப்படும் அகதிகள் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட அகதிகள் வங்காளதேசம், மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக மேலும் பலரை இந்தியாவுக்குள் அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை போலி ஆவணங்கள் மூலம் மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் இவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். பெரும்பாலும் ரேஹிங்கியா பெண்களையே இவ்வாறு மலேசியா போன்ற நாடுகளுக்கு இந்த கும்பல் அனுப்பி வைத்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து உத்தரபிரதேசத்தில் தங்கி இருந்த ரோஹிங்கியா அகதிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் மட்டும் இதுவரை 15 ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com