

லக்னோ,
நாட்டிலேயே சிறந்த சாத்தியமான முதலீட்டு இலக்கு உத்திரப்பிரதேசம் தான். மேலும் மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை மிகச் சிறப்பாக உள்ளது என முதல்வர் யோகி ஆதித்யனாத் உத்திரப்பிரதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் இறுதி விழாவில் கூறியுள்ளார்.
இது குறித்து முதல்வர் கூறுகையில், முதலீட்டாளர்களுக்கு உகந்த வாய்ப்புள்ள மாநிலம் உத்திரப்பிரதேசம் தான் என நான் உறுதியளிக்கிறேன். இந்த நிகழ்வின் மூலம் மாநிலம் வணிக பொருளாதாரத்தில் புதிய உயரத்தை அடைந்துள்ளது. இரண்டு நாள் உச்சி மாநாட்டில் 10 நாட்டின் பிரதிநிதிகள், 6000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் 110க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இம்மாநாட்டில் மாநில அரசு 4.28 லட்சம் கோடி மதிப்பில் 1045 உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலமாக 33 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு பிரதமர் உதவியுள்ளார் எனத் தெரிவித்தார்.
மேலும் மாநாட்டில் முக்கிய பங்கு வகித்த நெதர்லாந்து, ஜப்பான் உட்பட ஏழு நாடுகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யனாத் தனது நன்றியை தெரிவித்தார்.