முதலிரவில் மணமகனை அலறவிட்ட மணமகள்...விட்டால் போதும் என்று ஓட்டம்


முதலிரவில் மணமகனை அலறவிட்ட மணமகள்...விட்டால் போதும் என்று ஓட்டம்
x

முதலிரவில் ஆயிரம் கனவுகளுடன் வந்த மணமகன், இதைக்கேட்டதுமே ஆடிப்போய் நின்றுவிட்டார்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் கட்டாய திருமணத்தால் முதலிரவில் தனது கணவனை 35 துண்டுகளாக வெட்டுவதாக கத்தியுடன் மிரட்டிய மணமகளால், மணமகன் விட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து வருமாறு;-

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் ஏடிஏ காலனி பகுதியை சேர்ந்தவர் நிஷாத் (வயது 26) இவருக்கும், கர்ச்சனா தீஹா கிராமத்தை சேர்ந்த சித்தாரா என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் 29 ம் தேதி குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

மறுநாள் ஏப்ரல் 30ம் தேதி அன்று மணமகள் மாமியார் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ தம்பதி இருவருக்கும் மே 2ம் தேதி, வெகு பிரம்மாண்டமாக ரிசப்ஷன் நடத்தப்பட்டது. இதையடுத்து, மணமக்களுக்கு முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதலிரவு அறைக்குள் மணமகன் உள்ளே நுழைந்தபோது, மணமகள் முதலிரவு வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார் சித்தாரா. அவரது கையில் கூர்மையான கத்தி இருந்ததை பார்த்து மணமகன் அலறிவிட்டார்.

அப்போது சித்தாரா, என்னை தொடாதே.. கிட்ட வராதே..நான் ஒருவரை காதலிக்கிறேன். அவர் பெயர் அமன். நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறோம். இந்த திருமணம் எனக்கு பிடிக்கவில்லை. என்னை கட்டாயப்படுத்தி உன்னை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அமன் மட்டுமே என்னை தொட தகுதியானவர். நான் அவனுடன்தான் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறினார். மேலும் அதையும் மீறி என்னை தொட்டால் உன்னை 35 துண்டுகளாக கூறுபோட்டு வெட்டிவிடுவேன் என்று மிரட்டினார். ஆயிரம் கனவுகளுடன் வந்த மணமகன், இதைக்கேட்டதுமே ஆடிப்போய் நின்றுவிட்டார். விட்டால் போதும் என்று மறுநாள் விடியும் விடியாதாக வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். மானம் போய்விடும் என்று இந்த விவகாரத்தை யாரிடம் கூறாமல் 3 நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

அதன்பிறகு ஒருவழியாக மணமகள் விவகாரம் மணமகன் குடும்பத்தாருக்கு தெரிந்துள்ளது. இதுகுறித்து சித்தாராவிடம் கேட்டதற்கு, ஆமாம், நான் அமன் என்பவரை காதலிக்கிறேன்.என் பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் இந்த திருமணத்தை செய்துகொண்டேன் என்று சிறிதும் சலனமில்லாமல் துணிச்சலாகவும், தீர்க்கமாகவும் பிடிவாதமாகவும் கூறினார்.

இதையடுத்து, 2 குடும்பத்து பெரியவர்களும் இதுகுறித்து ஆலோசனை நடத்தினர். இறுதியில், தாலி கட்டிய கணவருடன்தான் சித்தாரா வாழ வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் சித்தாராவும், கணவருடனேயே வாழ்வதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்.நாளடைவில் அனைத்தும் சரியாகிவிடும் என்று மணமகன் உட்பட அனைவருமே எதிர்பார்த்திருந்தனர்.. ஆனால், மே 30ம் தேதி நள்ளிரவு, வீட்டின் பின்பக்க சுவர் ஏறி குதித்து சித்தாரா தப்பி சென்றுவிட்டார்.

இது அங்கிருந்த சிசிடிவி காட்சியிலும் பதிவாகியுள்ளது. இதை மணமகன் குடும்பத்தினர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம். இது குடும்ப பிரச்சனை என்பதால், 2 தரப்பிலுமே பேசி தீர்த்துக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக கூறிவிட்டதால், இதுகுறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

இது குறித்து மணமகன் குடும்பத்தினர் கூறியதாவது:-

"அமன் என்பவன் எங்களது மகனை கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார். அந்த மிரட்டல் ஆடியோ மெசேஜை சித்தாரா தன்னுடைய செல்போனில் எங்களுக்கு காட்டினார். இதனால் ஒருவித பயத்துடன்தான் நாங்கள் இருந்து வந்தோம். சித்தாரா வீட்டை விட்டு ஓடிப்போனது ஒருவகையில் நல்லதுதான். அவளும் நன்றாக இருக்கிறார், என் மகனும் உயிருடன் இருக்கிறார் என்றனர்.

1 More update

Next Story