

லக்னோ,
உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன், கட்சியின் செய்தி தொடர்பாளர்கள், நிர்வாகம், அமைப்பு, நிதி ஆகிய நான்கு துறைகளும் முற்றிலும் கலைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை, உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜ்பப்பர் வெளியிட்டார். நிர்வாகம் மற்றும் அமைப்பு ஆகிய துறைகளுக்கான நிர்வாகிகள் 24 மணி நேரத்திற்குள் நியமிக்கப்பட்ட போதிலும், நிதி மற்றும் ஊடகத்துறை (செய்தி தொடர்பாளர்கள்) ஆகிய துறைகளுக்கு இன்னும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை.
புதிய செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்படும் வரை, ஏற்கனவே, செய்தி தொடர்பாளர்களாக செயல்பட்டு வந்த சுமார் 24 பேர் ஊடகங்களில் பேச தடை விதிக்கப்படுவதாக உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டது. புதிய செய்தி தொடர்பாளர்கள் மற்றும் அலுவலக நிர்வாகிகள், திறமையை சோதிக்கும் தேர்வுக்கு பிறகே தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டு இருந்தது. எழுத்துதேர்வு மற்றும் நேரடி நேர்காணல் ஆகிய பரிசோதனைகளுக்கு பிறகே, தேர்வு செய்யப்படுவர் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியதாக டி.என்.ஏ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கான எழுத்துதேர்வு நேற்று நடைபெற்றது., இதில் 70 பேர் வரை தேர்வாகியுள்ளனர். நேர்காணல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்வுகளின் முடிவுகள், நாளை வெளியிடப்படும் என்று உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தேர்வு நடைபெற்றது எப்படி?
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கம்யூனிகேஷன் பிரிவு ஒருங்கிணைப்பாளர்களான பிரயங்கா சதுர்வேதி மற்றும் ரோகன் குப்தா, கேள்வித்தாள்களை வழங்கியுள்ளனர். கேள்வித்தாளில் மொத்தம் 14 கேள்விகள் இடம் பெற்று இருந்தன. பெரும்பாலும் அரசியல் அறிவு பற்றிய கேள்விகளே இடம் பெற்று இருந்தன. உத்தர பிரதேச மாநிலத்தின் வரலாறு பற்றிய சில கேள்விகளும் இருந்தது. உத்தர பிரதேசத்தில் எத்தனை பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது? என்பன போன்ற எளிய கேள்வியும் இடம் பெற்றிருந்தது. ஆனால், ஒரு சில கேள்விகள் கடினமானதாகவும் இடம் பெற்று இருந்தது. அதாவது, எத்தனை டிவிஷன் மற்றும் பிளாக்குகளாக உத்தர பிரதேசம் பிரிக்கப்பட்டு உள்ளது? என்ற கேள்வியும் இடம் பெற்று இருந்தது. இந்த கேள்விக்கு, பதிலளிக்க தெரியாமால், தேர்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் தடுமாறினர்.
தேர்வு எழுதும் போது, பல கேள்விகளுக்கு மொபைல் இணையதள உதவியுடன் பதிலளித்தோர், நேர்முகத்தேர்வில் அது தொடர்பான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தனர். நேர்முகத்தேர்வை ராஜ்பப்பர், பிரியங்கா, ரோகன் ஆகியோர் மேற்கொண்டனர். தேர்வு நடத்தியதற்கு, கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.