

லக்னோ,
உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாஜஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் சர்மா (வயது 55). அவரது மனைவி கிரண் (வயது 50). இந்த தம்பதியினருக்கு ஷோபித் (வயது 10) என்ற மகன் உண்டு.
இவர்கள் 3 பேரும் நேற்று இரவு மதன்பூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்றனர். ததியாரி கிராமத்திற்கு அருகே சென்றபோது எதிர்திசையில் வந்த ஒரு பிக்கப் வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனம் பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில் நிலைகுலைந்து போய் மூன்று பேரும் பைக்கிலிருந்து சாலையில் விழுந்தனர். சாலையில் விழுந்ததில் சந்தோஷ் சர்மா மற்றும் அவரது மனைவி கிரண் பலத்த காயமடைந்தனர். அவர்களின் மகன் ஷோபித்திற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் இவர்கள் வருவதற்கு முன்பாகவே பிக்கப் வாகனத்தின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பலத்த காயமடைந்த தம்பதியினரை போலீசார் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சந்தோஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவரது மனைவி பின்னர் பரூக்காபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பிக்கப் வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.