

லக்னோ
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, ராம ஜென்ம பூமி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் 9-ந்தேதி ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், பாபர் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மக்களவையில் நேற்று பேசிய பிரதமர் நரேந்திரமோடி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம். அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும்.
அயோத்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபடி சன்னி வக்ஃப் வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்க உத்தரபிரதேச அரசு ஒப்புக் கொண்டுள்ளது என கூறினார்.
மோடி அறித்தவுடன் மசூதி கட்ட சன்னி மத்திய வக்ஃப் வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கான திட்டத்தை உத்தரபிரதேச அரசு அறிவித்தது. ராம் ஜன்மபூமி தளத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் அந்த இடம் உள்ளது.
இது குறித்து உத்தரபிரதேச அரசின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறியதாவது:-
"நவம்பர் 9, 2019 அன்று சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பைசாபாத் மாவட்ட தலைமையகத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் மசூதிக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடம் அயோத்தியின் சோஹவால் தெஹ்ஸில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் அமைந்துள்ள லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலையிலிருந்து 200 மீ தொலைவில் உள்ளது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது என கூறினார்.
பைசாபாத் மாவட்டம் அதிகாரப்பூர்வமாக அயோத்தி என நவம்பர் 13, 2018 அன்று மறுபெயரிடப்பட்டது, இருப்பினும் பலர் அதை அதன் பழைய பெயராலேயே தொடர்ந்து அழைத்து வருகின்றனர். அருகிலுள்ள நகரமான பைசாபாத் அதன் அசல் பெயரை அதிகாரப்பூர்வ பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வரும் பாரம்பரியமான 15 கி.மீ பாதையான பஞ்ச்கோசி பரிகர்மா க்கு வெளியே மசூதிக்கு நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்று இந்து வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்ததாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட இடம் பைசாபாத் மாவட்ட தலைமையகத்திலிருந்து 18 கி.மீ தொலைவிலும், கோயில் தளத்திலிருந்து 25 கி.மீ தூரத்திலும் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.