

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின்னர் யோகி ஆதித்யநாத் அரசின் காவி மையம் தொடங்கியது. மாநிலத்தில் உள்ள பள்ளிகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிகுகூட பைகள், பேருந்துக்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்தும் காவி வர்ணத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டு வந்தது. அதில் உச்சமாக லக்னோவில் உள்ள ஹஜ் இல்லமும் காவியாகியது. ஹஜ் இல்லத்தின் வெளிப்புற சுவரில் காவி வர்ணம் பூசப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. மாநில தலைமை செயலகத்திற்கு எதிராக உள்ள ஹஜ் இல்லம் காவியாக காட்சி அளித்தது பல்வேறு தரப்பிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஒரேநாள் இரவில் காவி நிறம் பூசப்பட்டது. காவி நிறம் பூசப்பட்டதற்கு இஸ்லாமிய சமூதாயத்தில் இருந்து பெரும் எதிர்ப்பு எழுந்தது.
அனைத்து இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரிய செய்தித் தொடர்பாளர் யாசூப் அப்பாஸ் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.
என்னது இது? பாரதீய ஜனதா காவி நிறத்தை பூசும், சமாஜ்வாடி பச்சை நிறைத்தை பூசும், பகுஜன் சமாஜ் நீல நிறத்தை பூசும்... இந்த கலர் அரசியலை கைவிட வேண்டும்,என்றார்.
இஸ்லாமிய மதகுரு காசி மவுலானா அப்துல் இப்ரான் மியான் பேசுகையில், ஹஜ் அலுவலகத்திற்கு காவி நிறம் பூசப்பட்டது முற்றிலும் எதிர்ப்புக்குரியது. காவி நிறமானது அரசியலுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் இனி ஹஜ் பயணிகளும் காவி நிற ஆடையை அணியவேண்டும் என்பார்கள்?என கேள்வியை எழுப்பி உள்ளார். எதிர்க்கட்சியான சமாஜ்வாடியும் பாரதீய ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்தது. நிறத்தை மாற்றுவதில் அறியப்பட்டது பாரதீய ஜனதா. தவறுகளையும் தோல்விகளையும் மறைப்பதற்கு இப்போது நிறைத்தை பா.ஜனதா அரசு கையில் எடுத்து உள்ளது. காவி நிறத்தை புனிதமானது என அவர்கள் கருதினால் அதனை உண்மையாகவே அவர்கள் அரசியலுக்குள் நுழைக்க கூடாது, என சமாஜ்வாடியின் செய்தித் தொடர்பாளர் சுனில் சிங் சாஜான் பேசிஉள்ளார்.
அனைத்து தரப்பிலும் இருந்து பா.ஜனதா அரசு எதிர்ப்பை சந்தித்த நிலையில் மாநில இஸ்லாமிய அமைச்சர் இதனை நியாயப்படுத்தினார்.
புதிய நிறத்தை பூசியதால் என்ன பிரச்சனை என்றுதான் என்னால் அறிந்துக்கொள்ள முடியவில்லை. காவி நிறம் தேசத்திற்கு எதிரானது? காவி நிறம் பிரகாசம் மற்றும் திறனுக்கு சின்னமானது, என்று சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி மக்சிங் ராசா விளக்கம் கொடுத்து உள்ளார்.
பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்ததும் உத்தரபிரதேச மாநில அரசு 24 மணி நேரங்களில் சுவரின் நிறத்தை வெள்ளையாக்கியது. எப்படி ஒரே நாள் இரவில் காவி நிறம் பூசப்பட்டதோ, அதே போன்று வெள்ளை நிறம் அடிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே விளக்கம் அளித்து உள்ள உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசு குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டு உள்ளது.