

லக்னோ,
உத்தரபிரதேசத்தில் சில பெட்ரோல் விற்பனை நிலையங்கள் (பங்க்) வாடிக்கையாளர்களை மோசடி செய்வதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து மாநில சிறப்பு அதிரடிப்படையினர் கடந்த மாதம் 7 பெட்ரோல் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவை, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரிமோட் மூலம் இயங்கும் எலக்ட்ரானிக் சிப்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.3 ஆயிரத்துக்கு கிடைக்கும் இந்த சிப்களை பொருத்தினால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 940 மி.லி. பெட்ரோல்தான் வாகனங்களில் ஏறும். இதன் மூலம் மாதந்தோறும் சுமார் ரூ.14 லட்சம் வரை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார் இந்த சிப்கள் தயாரிப்பில் தொடர்புடைய ஜவுகர் அப்பாஸ் என்பவரை சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், பெட்ரோல் நிலையங்களுக்கு எலக்ட்ரானிக் சிப்களை வினியோகித்து வந்த அஜய் சவுராசியா என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். லக்னோ அருகே உள்ள பரா பகுதியை சேர்ந்த அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.