பைக்கில் காதல் ஜோடி உல்லாச பயணம்: போலீசார் செய்த தரமான சம்பவம்

வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்ட, அவருடன் இருந்த இளம்பெண் பெட்ரோல் டேங்கில் அமர்ந்திருக்கிறார்
நொய்டா,
சமீபகாலமாக இளம்ஜோடிகள் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் போது அத்துமீறி நடந்து கொள்வது போன்ற வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பரவுகின்றன. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு இளம் ஜோடி ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளது.
அப்போது வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்ட, அவருடன் இருந்த இளம்பெண் பெட்ரோல் டேங்கில் அமர்ந்திருக்கிறார். அதுவும் அவர் பைக் ஓட்டும் வாலிபரை பார்த்தவாறு திரும்பி அமர்ந்திருந்ததோடு அவரை கட்டி அணைத்தவாறு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
வீடியோவை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிள் எண் மூலம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஜோடியை மடக்கிய போலீசார் அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மொத்தம் ரூ.53 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வீடியோவில், அந்த ஜோடி பைக்கில் அத்துமீறி சென்ற காட்சிகளும், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட செலானும் உள்ளது. வீடியோவுடன் போலீசாரின் பதிவில், இந்த முறை பெரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காதல் பாடமல்ல, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள், விதிகளை பின்பற்றுங்கள். உங்கள் காதல் கதை நீண்டகாலம் வாழட்டும் என பதிவிட்டனர்.






