

லக்னோ,
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ராஜஸ்தான் மாநிலத்தில் படித்துக் கொண்டிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் மாணவர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். கடந்த மாத இறுதியில் அவர்களை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு, தனது பஸ்களில் கோடாவில் இருந்து உத்தரபிரதேசத்தின் ஆக்ரா, ஜான்சி, பதேபூர் சிக்ரி ஆகிய ஊர்களுக்கு அனுப்பி வைத்தது.
இதற்கு எரிபொருள் கட்டணமாக ரூ.19 லட்சம் வழங்குமாறு உ.பி. அரசிடம் கேட்டது. அதை உ.பி. அரசு காசோலை மூலம் அளித்தது. இதையடுத்து, மேலும் ரூ.36 லட்சத்து 36 ஆயிரம் அளிக்குமாறு ராஜஸ்தான் அரசு கேட்டுள்ளது. அதையும் உ.பி. அரசு வழங்கியுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துவர ஆயிரம் பஸ்களை அனுப்புவதாக காங்கிரஸ் கட்சி கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு கூடுதலாக ரூ.36 லட்சம் கேட்ட தகவலும் வெளியே கசிந்துள்ளது.
இதற்காக காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உத்தரபிரதேச பா.ஜனதா பொதுச்செயலாளர் விஜய் பகதூர் பதக் கூறியதாவது:-
ஒருபுறம், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஆயிரம் பஸ்களை அனுப்பி, மக்களுக்கு சேவை செய்து வருவதாக காங்கிரஸ் சொல்கிறது. ஆனால் மறுபுறம், ராஜஸ்தான் அரசின் பெயரில் காங்கிரசின் உண்மை முகம் தெரிந்து விட்டது.
அத்துடன், ஆயிரம் பஸ்கள் என்ற பெயரில் தகுதியற்ற பஸ், ஆட்டோக்களை அனுப்பி வைத்துள்ளது. இவற்றுக்கெல்லாம் பிரியங்கா பதில் சொல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.
உத்தரபிரதேச மாநில போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ராஜசேகரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஒருபக்கம், புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துவர ஆயிரம் பஸ்களை அனுப்புவதாக கூறிவிட்டு, மறுபுறம், மாணவர்களை அனுப்பி வைத்ததற்கு ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு கூடுதலாக ரூ.36 லட்சம் கேட்டுள்ளது. அதன் மனிதத்தன்மையற்ற செயலை இது காட்டுகிறது.
இத்தகைய அரசியல் விளையாட்டு, மிகவும் வருத்தத்துக்கு உரியது. இரு அண்டை மாநிலங்களுக்கு இடையிலான அருவறுப்பு அரசியல், மிகவும் சோகமானது என்று அவர் கூறியுள்ளார்.