உ.பி.: மகளுடன் தகாத உறவு என சந்தேகம்; வாலிபர், தாயாரை படுகொலை செய்த பெண்ணின் குடும்பம்

உத்தர பிரதேசத்தில் மகளுடன் தகாத உறவு என்ற சந்தேகத்தில் வாலிபர் மற்றும் தாயார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உ.பி.: மகளுடன் தகாத உறவு என சந்தேகம்; வாலிபர், தாயாரை படுகொலை செய்த பெண்ணின் குடும்பம்
Published on

கவுசாம்பி,

உத்தர பிரதேசத்தின் கவுசாம்பி மாவட்டத்தில் கஜூ கிராமத்தில் வசித்து வந்தவர் சர்வஜீத் திவாகர் (வயது 22). இவருடைய தாயார் சங்கீதா (வயது 49). இந்நிலையில், அதே கிராமத்தில் வசித்து வரும் சாந்தி தேவி (வயது 50), தன்னுடைய மகளுடன் திவாகருக்கு தகாத உறவு உள்ளது என சந்தேகித்து இருக்கிறார்.

இதனை தொடர்ந்து, 20 வயது கொண்ட மகன்களான ஷானி மற்றும் ஷ்ரவன் ஆகிய இருவரை அழைத்து கொண்டு சென்று, நேற்றிரவு திவாகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில், தகராறு முற்றியதில் திவாகரை ஆயுதம் கொண்டு 3 பேரும் தாக்கியுள்ளனர். தடுக்க வந்த சங்கீதாவையும் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய 3 பேரும் தப்பியோடி விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் காயங்களுடன் கிடந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும், அவர்கள் இருவரும் சிகிச்சையின்போது உயிரிழந்து விட்டனர். இதன்பின்பு அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதுபற்றி போலீஸ் கூடுதல் சூப்பிரெண்டு ராஜேஷ் குமார் சிங் கூறும்போது, இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிந்து, ஷ்ரவனை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் 2 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com