உ.பி.: டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரிப்பு

உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ், கான்பூர் உள்பட பல நகரங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்து உள்ளது.
உ.பி.: டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரிப்பு
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் கொசுக்களால் பரவ கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. இதன்படி பிரயாக்ராஜ், கான்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் பாதிப்பு காணப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன், பிரயாக்ராஜ் நகரில், ஒரு பள்ளி கூடத்தில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளான நிலையில், ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நகரின் பல பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது.

இதுபற்றி பிரயாக்ராஜ் தலைமை மருத்துவ அதிகாரி நானக் ஷரண் கூறும்போது, மாவட்டத்தில் டெங்குவை ஆய்வு செய்வதற்காக, பல பகுதிகளில் பூச்சி கொல்லிகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.

இந்த சூழலில் பிரயாக்ராஜ் நகரில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 36 பேர் உயிரிழந்து இருக்க கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதனையும் அரசு நிர்வாகம் வெளியிடவில்லை.

பிரயாக்ராஜ் நகரில் பல இடங்களிலும் டெங்கு பரவல் அதிகரித்து அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.

டெங்கு பாதிப்புகளை முன்னிட்டு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கடந்த சனிக்கிழமை உயர்மட்ட சீராய்வு கூட்டம் நடத்தி, அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு பற்றி மாநில சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த சூழலில், லகிம்பூர் கேரி மாவட்டத்தில் பல பகுதிகளில் டெங்குவால் பலர் பாதிப்படைந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களில் டெங்கு கடுமையாக பாதித்த 9 நோயாளிகள் மாவட்ட மருத்துவமனையின் டெங்கு வார்டில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

எனினும், உயிரிழப்பு எதுவும் இல்லை. டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க சுகாதார பணியாளர்கள் குழுவினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மருந்துகள், அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அரசு அனைத்து மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களின் விடுமுறைகளை ரத்து செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

கான்பூரில் டெங்கு வார்டில் சிகிச்சைக்கு சேர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபற்றி அரசு மருத்துவமனையின் டாக்டர் ஷைலேஷ் குமார் சிங் கூறும்போது, தினசரி 60 முதல் 70 பேர் காய்ச்சல் பாதிப்புக்காக சேருகின்றனர்.

அவர்களில் டெங்கு பாதிப்பு உறுதியானவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 6 பெரியவர்கள் மற்றும் 7 குழந்தைகள் என 13 பேர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து உள்ளனர் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com