கணவன் - மனைவியை பிரித்த 5 ரூபாய் குர்குரே

தினமும் மனைவிக்காக குர்குரே வாங்கி வந்துகொண்டிருந்த கணவன் , ஒரு நாள் மனைவியுடன் நடந்த சண்டையில் குர்குரே வாங்கி வர மறந்து விட்டார்.
கணவன் - மனைவியை பிரித்த 5 ரூபாய் குர்குரே
Published on

லக்னோ,

இந்தியாவில் சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் ஜங்க் நொறுக்குதீனியாக குர்குரே உள்ளது. அரிசி, சோளம் ஆகியவற்றுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளைக் கலந்து மொறுமொறுப்பான நொறுக்குதீனியாக குர்குரே தயாராகிறது. இதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பலர் கூறிவந்தாலும் இன்றளவும் குர்குரே அதிகம் விரும்பி உண்ணப்படும் பண்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கணவன் குர்குரே வாங்கித் தராததால் மனைவி அவரைப் பிரிந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு குர்குரே சாப்பிடுவதில் அதீத ஆர்வம் இருந்துள்ளது. கிட்டத்தட்ட குர்குரேவுக்கு அடிமையான அப் பெண் தனக்கு தினமும் 5 ரூபாய் பாக்கெட் குர்குரே வாங்கித்தர வேண்டும் என்று தனது கணவரிடம் வலியுறுத்தியுள்ளார். அதன்படி தினமும் மனைவிக்காக குர்குரே வாங்கி வந்துகொண்டிருந்த கணவன் ஒரு நாள் மனைவியுடன் நடந்த வாக்குவாதத்தில் குர்குரே வாங்கி வர மறந்துவிட்டார். இதனால் கணவரைப் பிரிய முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அந்தப் பெண், அவருடைய பெற்றோர் வீட்டில் போய் தங்கியுள்ளார். பின்னர் விவாகரத்து கோரியுள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரம் காவல் நிலையத்துக்கு செல்ல, அவர்கள் இருவரையும் அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது அந்தப் பெண், குர்குரே விவகாரத்தை மறைத்து, தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் கணவர் அதை மறுத்துள்ளார். குடும்பநல ஆலோசனை மையத்துக்கு இருவரும் பின்னர் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு, இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பின்னர், சில நாட்கள் கழித்து இருவரும் மீண்டும் ஆலோசனைக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்களிடம் பல அமர்வுகளில் தொடர்ந்து பேசிய ஆலோசகர் தெரிவிக்கையில், அப்பெண்ணுக்கு குர்குரே மீது இருந்த அதீத ஆர்வமே அவர் கணவரைப் பிரிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com