

ராய்கஞ்ச்,
நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளிலேயே வெற்றி பெற்றது. முந்தைய தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பா.ஜ.க. 18 தொகுதிகளை கைப்பற்றி அக்கட்சிக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் மற்றும் 50 கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் சிலர் பா.ஜ.க.வில் சேர உள்ளனர். காத்திருந்து கவனியுங்கள் என பெயர் வெளியிட விருப்பமில்லாத பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் நேற்று கூறினார். இந்த 6 எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் தெற்கு வங்காளத்தில் இருந்தும் மற்றும் 2 பேர் வடக்கு வங்காளத்தில் இருந்தும் வருவார்கள் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தின் ராய்கஞ்ச் நகரில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட தேபஸ்ரீ சவுத்ரி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, வருகிற சட்டசபை தேர்தல் ஒரு முனை போட்டியாக இருக்கும். ஏனெனில் திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியே இருக்காது.
அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்கள் பா.ஜ.க.வில் சேர்ந்து கொண்டிருக்கின்றனர். அடுத்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் எதுவும் செய்ய முடியாது. அங்கு பா.ஜ.க.வே ஆட்சி அமைக்கும். இன்னும் 5 முதல் 6 மாதங்களில் அக்கட்சியை காலி செய்து விடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.