

புதுடெல்லி,
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், திடக்கழிவு மேலாண்மை விதிகளை செயல்படுத்தும் விதம் மிகவும் அதிருப்தி அளிப்பதாக ஏற்கனவே கூறியிருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
கழிவுகள் உற்பத்திக்கும் சுத்திகரிப்புக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இது சுற்றுச் சூழலுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன் பொது சுகாதாரத்துக்கும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். 2021-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதிக்குள் திடக்கழிவு மேலாண்மை அமைக்கப்பட வேண்டும் என்று விதிகளில் கூறப்பட்டு இருந்தாலும், பெரும்பாலான இடங்களில் அதற்கான பணிகள் தொடங்கப்படவே இல்லை என்பது கவலை அளிப்பதாக உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள வழக்கப்படியும் கழிவு உற்பத்தி மற்றும் சேகரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில்லை. ரெயிலில் பயணிக்கும் எந்த ஒரு நபரும் செல்லும் இடங்களில் எல்லாம் சிதறிக்கிடக்கும் குப்பைகளையும், நிரம்பி வழியும் கழிவுநீரையும் பார்க்கிற பொதுவான காட்சியாக உள்ளது.
கழிவுகளை உரிய முறையில் அகற்றாவிட்டால் 10 லட்சம் பேருக்கு அதிகமான மக்கள்தொகை உள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் மாதத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.
இந்த திருப்தியற்ற விவகாரத்தை மிக விரைவாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் சரி செய்ய உயர்மட்ட அளவில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு கழிவுகளை அகற்றும் நிதிச்சுமையை தாங்க முடியாவிட்டால், தவறு செய்யும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக மாநில அரசுகள் சுதந்திரமாக ஒரு தீர்வு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இழப்பீடு வழங்குவதற்கு அப்பாற்பட்டு, தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறைவேற்றாததற்கு பொறுப்பான அந்த உள்ளாட்சி அமைப்புகள், ஊரக மேம்பாட்டு துறை அதிகாரிகள் ஆகியோரின் ஆண்டு அறிக்கையில் பாதகமான குறிப்புகள் செய்யப்பட வேண்டும்.
அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் கண்காணிப்பு பிரிவு ஒன்றை ஒரு மாதத்துக்குள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.