

புதுடெல்லி,
இந்தியா முழுவதும் அவசர உதவிக்கு அழைக்கும் எண் 112-ல் தமிழ்நாடு உள்பட 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்தன. இதற்காக ரூ.278 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் முன்பு போலீஸ் உதவிக்கு 100, தீயணைப்பு உதவிக்கு 101, மகளிர் பாதுகாப்புக்கு 1090 என தனித்தனி அவசர உதவி எண்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் அமெரிக்காவில் தனித்தனி அவசர உதவி எண்ணுக்கு பதிலாக ஒரே அவசர எண்ணாக 911 பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல் இந்தியாவிலும் ஒரே அவசர உதவி எண்ணை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி நாடு முழுவதும் பயன்படுத்தும் வகையில் ஒரே அவசர உதவி எண்ணாக 112-ஐ மத்திய அரசு கொண்டு வந்தது. நிர்பயா நிதி உதவி திட்டத்தின் மூலம் மாநில அரசுகளுக்கு ரூ.278.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அந்தவகையில் அவசர உதவி எண் 112 திட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், தெலுங்கானா, குஜராத், காஷ்மீர், நாகாலாந்து, புதுச்சேரி உள்பட 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதில் இணைந்து உள்ளன.
இந்த திட்டத்தின்படி பயனாளி ஒருவர் அவசர உதவிக்கு ஸ்மார்ட்போனில் 112-ஐ அழுத்தலாம். அல்லது பவர் பட்டனை தொடர்ச்சியாக 3 முறை அழுத்த வேண்டும். சாதாரண போனில் 5 அல்லது 9 எண்ணை தொடர்ந்து அழுத்துவதன் மூலம் அவசர உதவியை பெறலாம். இணையதளம் மூலமாக உதவி பெற இ.ஆர்.எஸ்.எஸ். வலைத்தளத்தில் நுழைந்து மெயில் அனுப்பலாம். மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 112 இந்தியா மொபைல் செயலியையும் பயன்படுத்தலாம் என பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.