காவிரி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மறுபரிசீலனை செய்ய அவசர மனு; கர்நாடக அரசுக்கு, குமாரசாமி வலியுறுத்தல்

காவிரி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறுபரிசீலனை கர்நாடக அரசு அவசர மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
காவிரி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மறுபரிசீலனை செய்ய அவசர மனு; கர்நாடக அரசுக்கு, குமாரசாமி வலியுறுத்தல்
Published on

பெங்களூரு:

காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நீர்ப்பாசனத்துறை குறித்து சிறிதும் தெரியாதவாகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் என்ன ஆகும் என்பதற்கு இந்த காவிரி நெருக்கடியே சிறந்தே உதாரணம். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு துரதிருஷ்டமானது. இங்கு கோர்ட்டை விமர்சிக்க முடியாது. ஒவ்வொரு நிலையிலும் இந்த காங்கிரஸ் அரசு தவறு செய்துள்ளது.

இந்த கருத்தை அனைத்துக்கட்சி கூட்டத்தில் கூறினேன். நான் கூறிய கருத்துக்களை இந்த அரசு ஏற்கவில்லை. இந்த அரசுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை. இந்த அரசுக்கு மக்கள் நலனை விட அரசியல் நலனே முக்கியம். தமிழ்நாட்டில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளதால் கர்நாடகத்தின் நலனை இந்த அரசு விட்டுக் கொடுத்துள்ளது.

தொடக்கத்திலேயே சுப்ரீம் கோர்ட்டில் அரசு மனு தாக்கல் செய்து இருக்க வேண்டும். இந்தியா கூட்டணியை பலப்படுத்தும் நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீரை இந்த அரசு திறந்துவிட்டது. இந்த அரசு செய்த தவறு இது மட்டுமல்ல. காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணைய கூட்டங்களை இந்த அரசு சாதாரணமாக எடுத்துக் கொண்டது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூறிய கருத்தை இந்த அரசு மதிக்கவில்லை.

காவிரி பிரச்சினை கோர்ட்டு மூலம் தீர்க்கப்படாது என்று நான் கூறினேன். தற்போது தமிழகத்திற்கு பயன் ஏற்பட்டுள்ளது. நமக்கு அநீதி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை பார்க்கும்போது, கூட்டாட்சி முறைக்கு கவுரவம் கிடைக்காது போல் தெரிகிறது. மாநிலங்களவையில் காவிரி பிரச்சினை குறித்து தேவேகவுடா பேசினார். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே மவுனம் வகித்தார்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி கர்நாடக அரசு அவசரமாக மனு தாக்கல் செய்ய வேண்டும். வரும் நாட்களிலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்படும். வக்கீல்களின் பேச்சை கேட்டுக் கொண்டு தண்ணீரை திறந்தால், அதற்கு முடிவே இருக்காது. அரசு எதற்காக இருக்க வேண்டும்?. சுப்ரீம் கோர்ட்டை தொடக்கத்திலேயே அணுகி இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு அதை செய்யவில்லை.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com