அமெரிக்க வெளியுறவு மந்திரி, இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம்

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் 2 நாள் இந்திய சுற்றுப்பயணமாக நாளை மறுநாள் (27-ந்தேதி) டெல்லி வருகிறார். அவர் மனித உரிமைகள் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.
அமெரிக்க வெளியுறவு மந்திரி, இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம்
Published on

அமெரிக்க வெளியுறவு மந்திரி

அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி பதவி ஏற்றுள்ள ஆண்டனி பிளிங்கன், முதன்முறையாக நாளை மறுநாள் (27-ந்தேதி) தொடங்கி 2 நாட்கள் இந்தியாவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நாளை மறுநாள் அவர் தனிவிமானம் மூலம் டெல்லி வந்து சேர்கிறார்.அவரது இந்திய சுற்றுப்பயணம் முறைப்படி அமெரிக்காவாலும், இந்தியாவாலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு அடுத்த நிலையில் செல்வாக்கு மிக்க பதவியாக அமெரிக்க வெளியுறவு மந்திரி பதவி உள்ளது. எனவே அவரது இந்திய பயணம் பெரும் எதிர்பார்ப்பையும், முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மோடியுடன் சந்திப்பு

இந்த பயணத்தின்போது அவர் 28-ந்தேதி பிரதமர் மோடியையும், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்து முக்கிய பேக்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தைகளின் போது, ராணுவம், இணைய பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளிலும் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள்பற்றி விவாதிக்கப்படுகிறது.

மனித உரிமை பிரச்சினைகளை எழுப்புவோம்

இதுபற்றி தெற்காசியா மற்றும் மத்திய ஆசியா விவகாரங்களுக்கான அமெரிக்க துணை மந்திரி டீன் தாம்சன் வாஷிங்டனில் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் வெளியுறவு மந்திரியின் இந்திய பயணம், இருதரப்பு கூட்டை மேலும் ஆழமாக்குவதற்கான வழிகளில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் இ்ந்திய பங்காளிகளுடனான பேச்சுவார்த்தையின்போது எங்கள் பாதுகாப்பு, ராணுவம், இணைய பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படும். வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், இந்தியாவிடம் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்து பிரச்சினை எழுப்புவாரா என்று கேட்கிறீர்கள். ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். நாங்கள் அவற்றை எழுப்புவோம். அந்த பேச்சை நாங்கள் தொடர்ந்து நடத்துவோம். ஏனென்றால், பொதுவில் அவற்றின்மீது நாங்கள் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.இந்தியாவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதில் முக்கிய பங்கு வகிக்கும். இரு தரப்பு கூட்டுறவில் வலுவான முயற்சிகளை கட்டமைக்கும், நாங்கள் முன்னோக்கிச்செல்வோம்.

நம்பிக்கைக்குரிய கூட்டாளி

இந்தியாவுடன் வலுவான உறவு வைத்துள்ளோம். எல்லாவகையிலும் இது தொடரும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதமர் மோடியுடனும், இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடனும் எங்கள் வெளியுறவு மந்திரி பேசுவார். இரு தரப்புக்கும் பொதுவான நலன்கள் குறித்து விவாதிக்கப்படும்.எங்கள் இரு தரப்பு உறவு மிகவும் உயரத்தில் உள்ளது. இந்தியா நம்பிக்கைக்குரிய எங்கள் முக்கியமான கூட்டாளி. நாங்கள் உலகளாவிய விரிவான ராணுவ கூட்டை தொடர்வோம். எங்கள் நிர்வாகத்தில் இந்தியாவுடனான எங்கள் உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com