

அந்தமானின் வடக்கு சென்டினல் தீவுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் வெளியுலகினருடன் தொடர்புகளை ஏற்படுத்தாமல் தனித்து வாழ்ந்து வருகின்றனர். மிகவும் மூர்க்க குணம் கொண்ட இவர்கள், தங்கள் பகுதிக்குள் நுழையும் அன்னியர்களை அம்பெய்தி கொன்று வருகின்றனர். குறைவான எண்ணிக்கையில் வாழும் இந்த பழங்குடியினரை பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவித்துள்ள மத்திய அரசு, வடக்கு சென்டினல் தீவுக்கு அன்னியர்கள் யாரும் செல்வதற்கும் தடை விதித்து உள்ளது. இந்த தடையை மீறி வடக்கு சென்டினல் தீவுக்கு சென்ற ஜான் ஆலன் காவ் (வயது 27) என்ற அமெரிக்கரை பழங்குடியினர் கொன்றுவிட்டனர்.
இதுதொடர்பாக விசாரித்துவரும் போலீஸ் வடக்கு சென்டினல் தீவுக்கு செல்வதற்கு ஆலனுக்கு உதவிய 7 மீனவர்களை கைது செய்துள்ளது.
சென்டினல் பூர்வகுடிகளான பழங்குடியினர் 350 அடி தொலைவுக்கு உட்பட்ட எந்தப்பொருள் மீதும் குறி தவறாமல் அம்பு எய்வதில் வல்லவர்கள். கொல்லப்பட்ட அமெரிக்கர் ஜான் ஆலன் காவ் உடலை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியை நோக்கி செல்வதே ஆபத்தானதாகும் என்று கூறப்படும் நிலையில் அமெரிக்கரின் உடலை மீட்க வேண்டும் என்று அவருடைய குடும்பத்தார் கோரிக்கையாக உள்ளது. அவருடைய உடலை மீட்க போலீஸ் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. சம்பவத்தை நேரில் பார்த்த மீனவர்களை அழைத்துக் கொண்டு போலீஸ் சென்டினல் தீவு நோக்கி சென்றுள்ளது. ஆனால் பழங்குடியினர் அவர்களை உள்ளே பிரவேசிக்க விடாமல் இருக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் வில், அம்புவுடன் குறிபார்த்த நிலையில் போலீசார் படகுடன் கரை திரும்பியுள்ளனர்.
அவர்கள் எங்களை பார்த்துக்கொண்டிருந்தார்கள், நாங்கள் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மோதல் ஏற்படக்கூடாது என்பதற்காக படகை திருப்பினோம் என்று கூறியுள்ளார் போலீஸ் அதிகாரி தேவேந்திர பதக். மானுடவியலாளர்கள் உதவியுடன் அவர்களை புரிந்துக்கொள்ள முயற்சி செய்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அமெரிக்கரின் சடலத்தை மீட்பது என்பது எளிதான காரியம் கிடையாது, பாதுகாக்கப்பட்ட பழங்குடியினருக்கு எதிராக எந்தஒரு குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது எனவும் மானுடவியலாளர்கள் கூறியுள்ளனர்.