2 டோஸ் தடுப்பூசிக்கும் ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்துங்கள் - மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுரை

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுரை கூறியுள்ளது.
2 டோஸ் தடுப்பூசிக்கும் ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்துங்கள் - மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுரை
Published on

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் புனே நகரில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான 2 தனித்தனி சான்றிதழ்கள் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், கோவின் வலைத்தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக பேசப்பட்டது.

இந்தநிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவின் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொண்ட 100 கோடிக்கு மேற்பட்டோருக்கு 190 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் செய்ய வேண்டியதெல்லாம், கோவின் வலைத்தளத்தில் தங்கள் பெயர், வயது, பாலினம் ஆகிய தகவல்களை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட 9 புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும். செல்போன் எண்ணையும் குறிப்பிட வேண்டும்.

2-வது டோஸ் தடுப்பூசிக்கு பதிவு செய்யும்போது, முதல் டோசுக்கு கொடுத்த அதே செல்போன் எண்ணையே அளிக்க வேண்டும். அப்போதுதான், 2 டோஸ் தடுப்பூசி போட்டவர் ஒரே நபர்தான் என்பதை கோவின் வலைத்தளம் அங்கீகரித்து, அவர் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர் என்பதற்கான சான்றிதழை அளிக்கும்.

முதல் டோசுக்கும், 2-வது டோசுக்கும் வெவ்வேறு செல்போன் எண்களை கொடுத்தால், கோவின் வலைத்தளம் அதை 2 வெவ்வேறு தனிநபர்களாக கருதிவிடும். எனவே, 2 டோஸ்களும் 2 வெவ்வேறு முதலாவது டோஸ்கள் என்பதற்கான சான்றிதழ்தான் கிடைக்கும்.

பெயர், வயது, பாலினம் ஆகியவை ஒரே மாதிரி இருந்தாலும், செல்போன் எண் வேறுபடும்போது, 2 வெவ்வேறு நபர்களாகவே கருதப்படும். ஏனென்றால், 100 கோடிக்கு மேற்பட்டோர் உள்ள நாட்டில் ஒரே பெயர், வயது, பாலினத்துடன் ஆயிரக்கணக்கானோர் இருப்பார்கள்.

மேலும், 2 வெவ்வேறு செல்போன் எண்களுக்கு ஒரே அடையாள ஆவணம் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே, மனிதர்களால் ஏற்பட்ட இந்த தவறை தொழில்நுட்ப குளறுபடி என்று கூறுவது அபத்தமானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com