

லக்னோ,
உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சி சமைத்ததற்காக 3 பெண்களை போலீசார் கைதுசெய்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பசுவதை தடை சட்டம் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. மாடுகளை இறைச்சிக்காக விற்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், மாட்டிறைச்சியை வைத்திருப்பதும், சமைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநிலத்தில் கௌசாம்பி என்னுமிடத்தில் உள்ள ஒரு வீட்டில் மாட்டிறைச்சி சமைக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு வீட்டில் 3 பெண்கள் மாட்டிறைச்சியை பச்சையாக வைத்திருந்ததும், சமையல் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பெண்களையும் கைதுசெய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த ஒரு கிலோ பச்சை இறைச்சி மற்றும் ஒரு கிலோ சமைத்த இறைச்சியை பறிமுதல் செய்தனர். மாட்டிறைச்சி எங்கிருந்து கிடைத்தது? யார் கொடுத்தார்கள் என அப்பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.