உத்தர பிரதேசம்: மேம்பாலத்தில் நின்று செல்பி... லாரி மோதி 4 இளைஞர்கள் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தர பிரதேசம்: மேம்பாலத்தில் நின்று செல்பி... லாரி மோதி 4 இளைஞர்கள் உயிரிழப்பு
Published on: 

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி அருகே சிவ்புரியை சேர்ந்த நண்பர்களான 7 பேர் ஒரு காரில் மிர்சாபூரில் உள்ள விந்தியாச்சல் கோவிலுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டனர். அவர்கள் அங்கு சாமி தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று காலை ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மேம்பாலத்தில் செல்பி

அந்த சமயத்தில் பிரயாக்ராஜ்-வாரணாசி நெடுஞ்சாலையில் உள்ள ரூபாபூர் அருகே மேம்பாலத்தில் தங்கள் காரை நிறுத்தினர். கார் முன்பாக நின்று 7 பேரும் செல்போனில் 'செல்பி' புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்துள்ளனர்.

அந்த சமயத்தில் அந்த வழியாக அதிவேகமாக லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியதுடன், 'செல்பி' எடுத்துக் கொண்டிருந்த வாலிபர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.

கோர விபத்து

இந்த கோர விபத்தில் காரின் அடியில் சிக்கி 7 பேரும் உயிருக்கு போராடினர். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ரூபாபூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் காரின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 7 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அப்பளம் போல் நொறுங்கிய காரில் இருந்து காயமடைந்தவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து கியாஸ் கட்டர் மூலம் விபத்துக்குள்ளான காரின் உதிரி பாகங்களை வெட்டி எடுத்து ஒவ்வொருவராக மீட்டனர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் 3 பேர் படுகாயமடைந்து இருந்தனர். உடனே காயமடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com