உத்தர பிரதேசம்: ஒரு பெண்ணை திருமணம் செய்ய 2 மாப்பிள்ளைகள் ஊர்வலமாக வந்ததால் குழப்பம்

நிச்சயிக்கப்பட்ட தேதியில் இரண்டு மாப்பிள்ளைகளும் திருமண மண்டபத்திற்கு புறப்பட்டு வந்துள்ளனர்.
உத்தர பிரதேசம்: ஒரு பெண்ணை திருமணம் செய்ய 2 மாப்பிள்ளைகள் ஊர்வலமாக வந்ததால் குழப்பம்
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அவர்களின் கலாசார முறைப்படி மாப்பிள்ளை வீட்டார் மணமகனை ஊர்வலமாக மணமேடைக்கு அழைத்து வருவார்கள். இதன்படி, மாப்பிள்ளையின் வருகைக்காக மணப்பெண் வீட்டார் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், அங்கிருந்த அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கு 2 மாப்பிள்ளைகள் மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தனர். இதனால் திருமண வீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அங்கு வந்த இரண்டு குழுவினருமே, எங்கள் வீட்டு மாப்பிள்ளைக்குத்தான் உங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என மணப்பெண் வீட்டாரிடம் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர்.

அதுமட்டுமின்றி, 2 குழுவினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து மோதலில் ஈடுபடத் தொடங்கினர். நிலைமை விபரீதமாக சென்று கொண்டிருப்பதை உணர்ந்த மணப்பெண் வீட்டார் உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தியபோதுதான் இந்த குழப்பத்திற்கான காரணம் தெளியத் தொடங்கியது.

அதாவது, அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு மொரதாபாத் மாவட்டத்தை சேர்ந்த அவரது உறவுக்கார ஆணுடன் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த திருமணத்தை பெண் வீட்டார் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் தங்கள் மகளுக்கு சம்பல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துவிட்டனர்.

அதே சமயம், மொரதாபாத் குடும்பத்தினர் தங்கள் மகனுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில், நிச்சயிக்கப்பட்ட தேதியில் இரண்டு மாப்பிள்ளைகளும் திருமண மண்டபத்திற்கு புறப்பட்டு வந்துள்ளனர். இதன் காரணமாகவே அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதைக் கேட்ட போலீசார் இந்த விவகாரத்தில் மணப்பெண் வீட்டார்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டனர். மணப்பெண் வீட்டார், தாங்கள் 2-வதாக நிச்சயம் செய்த சம்பல் மாவட்டத்தை சேர்ந்த மணமகனுக்குத்தான் தங்கள் மகளை திருமணம் செய்து கொடுப்போம் என்று உறுதியாக கூறிய நிலையில், மொரதாபாத் குழுவினரை அங்கிருந்து கிளம்பிச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

இதன்படி அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதை தொடர்ந்து, நிச்சயிக்கப்பட்டபடி திருமணம் நடந்து முடிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com