உத்தர பிரதேசம்: மருத்துவமனையில் இடம் மறுப்பு... பழங்குடியின பெண்ணுக்கு சாலையிலேயே பிரசவம் - டாக்டர் பணிநீக்கம்

சாதியை காரணம் காட்டி பழங்குடியினப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
உத்தர பிரதேசம்: மருத்துவமனையில் இடம் மறுப்பு... பழங்குடியின பெண்ணுக்கு சாலையிலேயே பிரசவம் - டாக்டர் பணிநீக்கம்
Published on: 

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தை சேர்ந்த ராணி என்ற பழங்குடியின பெண்ணுக்கு கடந்த செப்டம்பர் 30-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், ராணியின் குடும்பத்தினர் அவரை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனையில் ராணியை அனுமதிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

பழங்குடியின பெண்ணான ராணி, ‘முசாஹர்’ என்ற சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அங்கிருந்த ஊழியர்கள் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ராணியின் குடும்பத்தினர் அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக வெளியே அழைத்து வந்தனர்.

ஆனால் அதற்குள் சாலையிலேயே ராணிக்கு பிரசவம் ஆகி குழந்தை பிறந்தது. அவரது உறவினர்கள் ராணியை சுற்றி சேலை துணியை வைத்து தடுப்பு போல் அமைத்து பிரசவம் பார்த்துள்ளனர். குழந்தை நல்லபடியாக பிறந்த நிலையில், ராணியையும், பச்சிளம் குழந்தையையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே ராணியின் உறவினர்கள் சிலர், அரசு மருத்துவமனைக்கு வெளியே கூடி நின்று போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாதியை காரணம் காட்டி பழங்குடியினப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சந்தோஷ் சக் அளித்துள்ள விளக்கத்தில், சாதியை காரணம் காட்டி பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தனக்கு தகவல் தெரியவந்தவுடன், ராணியின் குடும்பத்தினரை உடனடியாக தொடர்பு கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ததாக அவர் கூறியுள்ளார்.

சம்பவத்தன்று ராணியின் குடும்பத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் ராணியின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததாகவும், அவரது ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் அளவு குறைவாக இருந்ததால் அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ராணியின் குடும்பத்தினரால் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்பதால் அவர்கள் மருத்துவமனையை விட்டு கிளம்பிச் சென்றுள்ளனர் என்றும், அப்போதுதான் அவருக்கு சாலையில் பிரசவம் ஏற்பட்டுள்ளது என்றும் தலைமை மருத்துவ அதிகாரி சந்தோஷ் சக் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தன்று பணியில் இருந்த டாக்டர் பங்கஜ் குமார் என்பவர் அஜாக்கிரதையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும், மற்றொரு டாக்டரான முகேஷ் பிரஜாபதியின் ஒரு மாத சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டதாகவும் தலைமை மருத்துவ அதிகாரி சந்தோஷ் சக் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com