மதமாற்ற திருமணம் செய்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
மதமாற்ற திருமணம் செய்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்
Published on

லக்னோ,

உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. அதன்படி உத்தர பிரதேசத்தில் 7 கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டமாகவும் உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் கோவாவில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 14, 20, 23, 27, மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தற்போது அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியாக இருந்த நிலையில், பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு காரணமாக அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அறிக்கை வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

அதன்படி இன்றைய தினம் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். லோக் கல்யான் சங்கல்ப் பத்ரா என்று அழைக்கப்படும் அந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வறுமாறு;-

* லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு பத்தாண்டு தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்

* அடுத்த ஐந்தாண்டுகளில் விவசாயிகளுக்கு பாசனத்திற்கு இலவச மின்சாரம்

* விவசாயிகளுக்கு 14 நாட்களில் கரும்புத் தொகை வழங்கப்படாவிட்டால், சர்க்கரை ஆலைகள் வட்டியுடன் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும்.

* மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த உள்கட்டமைப்புடன் கூடிய அரசு மருத்துவமனை கட்டப்படும்

* அடுத்த 5 ஆண்டுகளில், கோதுமை மற்றும் நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உறுதிப்படுத்தப்படும்

* திறமையான மாணவிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற, ராணி லக்ஷ்மிபாய் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும்.

* சுவாமி விவேகானந்த் யுவ ஷசக்திகரன் யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு கோடி டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும்.

* மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்

* ஹோலி, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு 2 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்

* 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பஸ் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்

* மீரட், ராம்பூர், கான்பூர் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத எதிர்ப்பு கமாண்டோ படைகள் அமைக்கப்படும்.

மேற்கண்ட முக்கிய அம்சங்கள், உத்தர பிரதேச தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com